பழையன கழிதலும் புதியன புகுதலும் - 1

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல!
காலச்சக்கரத்தின் ஞால சுழற்சியினை
நாம் சற்று நோக்குவோம்,
நம்மைச்சுற்றி உற்று நோக்குவோம்!

புதிய சிந்தனைகள் வரத்தில்லை,
ஒரு சில வரத்திலும் தரமில்லை,
முன்போல் இப்போதோ பழம்பெரும் கதைகளும்
பேசப்போதிய ஜனமில்லை!

அன்றைய கற்காலம்
அடுத்து வந்த பிற்காலம்
சரித்திரமும் பூகோளமுமாய்
படித்து அறிய பாடசாலைகள்.

அறுபதுகள் எழுபதுகள் அணிகலன் நுகர்வு,
எண்பதுகள் தொண்ணூறுகள் குணநலன் தகர்வு.
கடந்த நூற்றாண்டுடன் தொலைத்து விட்டோம்
தொன்மையும் தன்மையும்

நடப்பு நூற்றாண்டில் நாளும் பொழுதுமாய்
கன்னா பின்னாவென்றும் சின்னா பின்னமென்றும்
வெட்டிபேச்சில் வாய்ச்சொல் வீரர்களாகின்றோம்,
கந்தல் கந்தலாய் கிழிந்து தொங்குகிறோம்?

ஸ்டிக்கர் ஒட்டி தர்மபரிபாலனைகள் நடுநிசிவரை
நீயா நானாவென்று தொல்லைக்காட்சிகளில்
பகலெல்லாம் முக்கல் முனகல் சதி பதி குரோதம் என்று
வீட்டுக்கு வீடு சீரியல்கள் பக்கத்து வீடுகளில் பட்டிமன்றங்கள்.

எங்கே பிராமணன் என்று எழுதிய இலக்கிய சிந்தனையாளன்
செஞ்'சோ'ற்றுக்கடன் தீர்க்க சாராய தொழிலபதிரானால்
மது விலக்கு முடியவே முடியாதுவென்று முழங்கினால்
காந்தி தேசம் மானம் கப்பலேறிப்போகுது பாரீர்..!

மரம் வெட்டினோம், மாசுபடுத்தினோம்,
பிளாஸ்டிக் போட்டு பூமியின் வீரியத்திற்கு
தீ வைத்தோம், நம் நாளைய சந்ததிக்கு
சொர்க்கத்தை தொலைத்துவிட்ட சூனியக்கார கிழவிகளாகின்றோமே?

எதையாவது புதியதாய் சிந்தித்தோமா? செய்குவோமா?
சொல்லுங்கள் தோழர்களே, சொல்லுங்கள் நீங்கள்?

எழுதியவர் : செல்வமணி (11-Feb-16, 11:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 7659

மேலே