வேலைக்குப் போகும் இளம் தாய்மார்களுக்கு உதவாத சமூகம் ---------------- செய்தி
வேலைக்குப் போகும் இளம் தாய்மார்களுக்கு உதவாத சமூகம் இது
கார்ல் பிறந்து 117 நாட்களாகிவிட்டன. அது ஒரு திங்கள்கிழமை காலை. கண் விழித்ததும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். என் கணவருக்கும் எனக்கும் நடுவில் படுத்திருந்தான். எங்களை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறு குழந்தைக்கே உரிய பூரிப்பும் மகிழ்ச்சியும் முகத்தில் பரவியிருந்தன. மகப்பேறு விடுமுறை முடிந்து நான் அலுவலகம் போக வேண்டிய முதல் நாள் அது. ஒரு வகையில் நான் அதிர்ஷ்டசாலி. பிரசவத்துக்குப் பிறகு முதல் 3 மாதங்களும் விடுமுறையுடன் கூடிய ஊதியம் தந்தது என்னுடைய நிறுவனம். என்னுடைய பகுதியில் பல இளம் தாய்மார்கள் பிரசவம் முடிந்த சில வாரங்களுக்கெல்லாம் வேலைக்குத் திரும்ப நேர்ந்தது.
3 மாதங்களானதால் கார்லால் தலைதூக்கிப் பார்க்க முடிந்தது. அவனை விட்டுவிட்டு வேலைக்குப் போக மனம் வரவில்லை. இன்னும் சற்று வளரும்வரை அவனைப் பக்கத்திலிருந்து கவனித்துக்கொள்ளவே விரும்பினேன். பிறந்தது முதலே அவனுடன் இருந்தது சந்தோஷமாக இருந்தது. என்னைப் பார்த்துச் சிலவற்றைக் கற்றுக்கொண்டான். நான் தூக்கிக்கொள்ளும்போதும் பக்கத்தில் இருக்கும்போதும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான். சில நேரம், உடல் களைத்தாலும் மனம் சோர்ந்தாலும் அவனைப் பார்த்தவுடன் எல்லாம் பறந்துவிடும். அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனுடைய இப்போதைய, எதிர்கால வாழ்வுக்கான பயனுள்ள நேர முதலீடு என்றே மகிழ்ந்தேன்.
அடைக்கப்பட்ட வழிகள்
மகப்பேறு விடுமுறைக்காலம் முடியப்போகிறது என்றதும் என்னுடைய நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விடுப்பை நீட்டித்துத்தரக் கோரினேன். அப்படிச் செய்ய முடியாது என்று நிறுவன விதியைச் சுட்டிக்காட்டினர். ஊதியம் இல்லாத விடுப்பாவது தாருங்கள் என்று உயர் பதவியில் இருந்தவர்களிடம் கேட்டேன். வாய்ப்பே கிடையாது, வேலையை விட்டுவிடுங்கள் என்று பதிலளித்தனர். அதையும் பரிசீலித்தேன். ஏற்கெனவே, பிடித்தம்போக கைக்குக் கிடைத்த ஊதியம் வீட்டுச் செலவுக்குப் போதவில்லை. வேலையை விட்டுவிட்டால் வருவாய் குறைவதுடன் குடும்பத்துக்குக் கிடைத்துவந்த மருத்துவக் காப்பீட்டுச் சலுகையும் போய்விடும். என்னுடைய கணவர் லீ, நிரந்தர வேலை இல்லாமல் கிடைக்கும் வேலையைச் செய்துவந்தார். அப்படியும் என்னைவிட அதிகம் சம்பாதித்தார். எனவே, அவரையும் வேலையை விட்டுவிட்டு குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்ல முடியவில்லை. இருவரும் அமர்ந்து இருவருடைய மொத்த சம்பளம், வீட்டுச் செலவுகள், லீ வேலையைவிட்டால் இழக்கக்கூடிய வருமானம் போன்றவற்றைக் கணக்கிட்டோம். இருவரும் வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்று புரிந்தது.
நான் பட்டதாரியல்ல. பள்ளிப் படிப்போடு நிறுத்திய வள். வேலையில்லாமல் ஓராண்டு நான் பட்ட துயரத்தை மறக்க முடியாது. புத்தகப் பதிப்பு நிறுவனத்தில் வேலையைப் பெறுவதற்கு நான் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல. சின்னக் குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்குப் போகாமல் இருப்பது பேராபத்து என்பதால், குழந்தையைப் பகல் நேரத்தில் காப்பகத்தில் விட முடிவு செய்தோம். நான் வேலைபார்த்த இடத்துக்கு அருகில் இருந்த காப்பகத்தை மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே தேர்வு செய்தோம். உணவு இடைவேளை நேரத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க அது வசதியாக இருக்கும் என்று தீர்மானித்தோம். நான் எடுத்தது சரியான முடிவுதான் என்று லட்சம் முறை பேசி மகிழ்ந்தோம். அதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியும் இல்லை.
கார்லுடன் ரயிலில் சென்றோம். கைக்குழந்தையுடன் சென்றதால் ஒருவர் எழுந்து இடம் கொடுத்தார். சிறிதும் பயப்படாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். ரயிலில் பாலூட்டினேன். வயிறு நிறையச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்தேன். காலை 9.30 மணிக்கு காப்பகத்துக்குச் சென்றோம். அங்கிருந்த பெண் உதவியாளர் கைகளை விரித்து அவனை அழைத்தார். சில விநாடிகள் அவள் முகத்தையே உற்றுப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தான். எங்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக காப்பக உரிமையாளர் எதையோ சொன்னார். பிறகு, பிரிய மனமில்லாமல் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே அலுவலகம் சென்றேன். கார்லைக் கொண்டுபோய்ச் சேர்த்தபோது பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தைகள் கூட அங்கிருந்தன. கார்ல் 15 வாரக் குழந்தை. வலுவாக இருந்தான். பிறந்தது முதல் ஒரு நாள்கூட உடல் நலமில்லாமல் படுத்ததில்லை. எனவே, எனக்கு அச்சமில்லாமல் இருந்தது.
இழப்பின் வலி
பிற்பகல் 12.15 மணியானவுடன் அவனைப் பார்க் கவும் பால் கொடுக்கவும் ஓட்டமும் நடையுமாக அலுவலகத் திலிருந்து சென்றேன். இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறினேன். இரண்டாவது மாடியிலிருந்த அந்தக் காப்பகத்தின் வாயில் கதவு திறந்தே கிடந்தது. அவ்வளவு குழந்தைகள் இருக்குமிடம் திறந்து கிடக்கி றதே என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றேன். அவனுடைய மிருதுவான கன்னத்தில் முத்தமிட வேண்டும், அவன் என்னைப் பார்த்ததும் துள்ளிச் சிரிப் பான் என்று நினைத்துக்கொண்டே பார்வையை ஓடவிட்டேன். ஒரு மேஜையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த குழந்தையைப் பார்த்தேன். ஓ… அது என் கார்ல். அவனுடைய உதடும் வாயும் நீலம் பாரித்திருந்தது. அவனுடைய வாய்க்குள் காற்றை ஊதி அவனை உயிர்ப்பிக்கக் காப்பக உரிமையாளர் முயன்று கொண்டிருந்தார். அதைச் சரியாகச் செய்யக்கூட அவருக்குத் தெரியவில்லை.
காப்பகத்தில் சேர்த்த இரண்டரை மணி நேரத்துக்கெல்லாம் என் செல்வத்தை இழந்துவிட்டேன். என் உலகமே நொறுங்கி உடைந்தது. படுத்திருந்தவன் திடீரென்று இரண்டு கால்களையும் உதறியிருக்கிறான். காப்பக உதவியாளர் காப்பக உரிமையாளரிடம் அதைத் தெரிவித்திருக்கிறார். ‘குழந்தையென்றால் அதெல்லாம் சகஜம், சும்மா இரு’ என்று அதட்டியிருக்கிறார் உரிமையாளர். 20 நிமிடம் கழித்து, குழந்தையின் உடல் எந்த அசைவும் இல்லாமல் அடங்கிவிட்டது. உடனே கவனித்திருந்தால் கார்ல் பிழைத்திருப்பானோ? காப்பகத்தில் அவனை ஒருக்களித்துப் படுக்க வைத்திருக்கிறார்கள். அது பாதுகாப்பானதல்ல, மல்லாக்கப் படுக்க வைத்திருக்க வேண்டும்; அதனால் இறந்திருப்பானோ? இந்தக் கேள்விகள் என் ஆயுள் முடியும்வரை எனக்குள் எழுந்துகொண்டேயிருக்கும்.
என்னைப் போலக் குழந்தை பெற்ற எல்லா இளம் தாய்மார்களும் இப்படித்தான் பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகளை விட்டுப் பிரிய வேண்டுமா? காப்பகத்தின் உரிமையாளர் அல்லது உதவியாளரின் அக்கறை, திறமை, அனுபவம் ஆகியவற்றை நம்பி குழந்தையை விட்டுச் செல்ல வேண்டுமா?
குழந்தைகள் காப்பகத்தை நான் குறைகூறவில்லை; நான் வேலைபார்க்கும் நிறுவனத்தையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை; என்னுடைய கையில் தவழ்ந்திருக்க வேண்டிய குழந்தை, அந்நியரின் கையில் மரணத்தைத் தழுவிவிட்டான். இதற்கு யார் அல்லது எது காரணம். நம்முடைய வாழ்க்கை முறையா, சமுதாய அமைப்பா, அல்லது பொருளாதாரச் சூழலா? நான் மட்டுமல்ல என் போன்ற லட்சக்கணக்கான தாய்மார்களுக்கு இதே நிலைதான்; இது மிகப் பெரிய சித்திரவதை. உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாய்க்குலங்கள் படும் நிரந்தர வேதனை.
சுருக்கமாகத் தமிழில்: சாரி,
©: தி நியூயார்க் டைம்ஸ்
View Comments (6)Post Comment
More In: சிறப்புக் கட்டுரைகள் | சிந்தனைக் களம்
3