காதலான காதலுக்கு

அச்சாதாரண இரவினை
அசாதாரண இரவாய் மாற்றிடும்
நிலவையும் நின்று ரசிக்க செய்திடும்
குளிர் எழில் நிறைந்திட்ட
பொழில் பாவை அவள் ....

ஆங்கே சேரனின் சாயலில்
அதி வீரனாய் வீற்றிருந்த
மாறன் தனை - நேராய் அருகிருந்து
சிட்டுக்குருவியின் கனவினைப்போல
மிக மென்மையாய் வினவினாள்.....

ஆரா மாறா மணிமாறா.
இப்பாரே பாரா புது வீரா ...

உன் மதிமுகம் கண்டு மதிமயங்கி
சரிந்திடும் நிலையினில்
தெரிந்தவரை விதியென
எண்ணி வருந்திக்கிடக்கையில்
சாய்வென சரிந்திட நல்வசதியாய்
விரிந்தபடி இருக்கும் மா(ர்)-றனே !

சொல்

அடடா அழகின் சாதியினில்
மிளிர் சோதி இவள் பாதியன்றோ ??

மாறனின் பதில் - இல்லை

சொல்,

என்றும் என்னை பிரிந்திடாது
என்னில் நிலையாய் நிறைந்திட
வாசமாய் இருப்பாயன்றோ ??

மாறனின் பதில் - இல்லை

சொல்,

உன்னை நான் நீங்கி சென்றிடின்
கண்களில் கங்கையை சுரப்பாயன்றோ ??

மாறனின் பதில் - இல்லை

தொடர் இடிகளாய் இறங்கிய
"இல்லை" எனும் பதில்கள்
வழங்கிய தொல்லைகளை
தாங்கிடும் திராணியற்றவளாய்
கண்ணாடியில் இருந்து பிரிந்திடும்
பிம்பமாய் ஓசையேதுமின்றி
பிரிந்திட விரைந்தாள் ...

வளை நிறை வலக்கையை
வலித்திடாமல் வளைத்து பிடித்தவன்
விழித்திவலைகள் நிறைந்தவளை
நிறுத்தி விழிப்பார்வை பொருத்தி - விளித்தான்

அடடா , அழகே அழகின் சாதியினில்
மிளிர் சோதி நீயே ஆதியன்றோ !!

என்றும் உன்னை பிரிந்திடாது
உன்னில் நிலையாய் நிறைந்திட
உன் சுவாசமாய் இருப்பேனன்றோ !!

என்னை நீ நீங்கி சென்றிடின்
கண்களில் கங்கையை சுரந்தபடி
இறப்பேனன்றோ !!

எழுதியவர் : ஆசை அஜீத் (13-Feb-16, 5:46 pm)
பார்வை : 421

மேலே