நடமாடும் நதிகள் 10 - கட்டாரி

செழித்துப்படர்ந்திருந்தன
மைதானங்கள்...
பசியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன...
பந்தயக்குதிரைகள்.

எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...

காதல் வாய்க்கப்பெறாதவர்களின்
நிலவறை அலமாரிகளுள்
இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு
கைக்குட்டை...!

கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...

நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..

அண்ணன் மகளைத்
தலைகோதி.. அக்காள் மகளிடம்
மீசை முறுக்கிவிடுகிறது...
பெண்ணியம்...

அடிமைகள்
ஆராதிக்கப் படுகிறார்கள்...
இன்னுமொரு இறகு
உதிர்த்துப் பறக்கிறது... மயில்.

சிவராத்திரியும்...
ரமலானும்... வேறாய் அலங்கரித்திருக்க....
அப்படியே அழகாயிருக்கிறது
நிலா....

சாதனையாளர்கள்
பட்டியலிட மறந்தனர்..அழுது
வடிந்திருந்தன... தெருவிளக்குகள்.

மௌனித்திருந்தான் விக்ரமாதித்தன்....
தலைகீழாகவே வேதாளம்...
இல்லாது போயின நீதிக்கதைகள் .

தொடரில் இணைத்த நண்பர் ஜின்னா அவர்களுக்கும் படம் தந்துதவிய நண்பர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும் தொகுத்து வழங்கும் திரு. முரளி சாருக்கும் நன்றி.

எழுதியவர் : கட்டாரி (15-Feb-16, 4:53 am)
பார்வை : 729

மேலே