----------------------------------------ழ--------------------------------------

----------------------------------------"ழ"--------------------------------------
மேதினியில் தமிழ் மொழிபோல் இனிதும் இல்லை
தேன் தமிழின் ழகரம் வேறு மொழியில் இல்லை..!

"ழகரம்" மட்டும் இல்லை எனில் தமிழே இல்லை..
ழகரதமிழ் அமிழ்தசுவை அதற்கு இணையே இல்லை..!!

புகழ்வதற்கும் ழகரம்தான் வேண்டும் அன்றோ - இதை
புகல் என்று சொல்வதுவும் நன்றோ...? நன்றோ..?

தமிழை ருசிப்போர்க்கு "ழ" வென்பது வாழைப்பழம்தான்
தமிழைக் கடிப்போர்க்கு "ழ" வென்பது வாலைப் பலம்தான்..!!

நா மடக்கி அண்ணம் விலக்கி உரைத்தால்தானே
"ழ" உண்மை பொருள் தன்னைஅளிக்கும் அறிவீர் நீரே..!!

தமி என்று உரைத்தாலே தனித்துவம் தான்
தமியோடு ழவினைய பெரு(று)ம் மகத்துவம்தான்..!!

இழுத்துக் கொண்டு வரக்கூறின் "இஸ்துக்கொண்டு" வருவார்
பழுக்ககாய்ச்சி கம்பிதனை நாவிழுக்கும் எண்ணம் தருவார்..!!

சீர் கெடுக்கும் சென்னை பேச்சில் தமிழைக் குதறி
செவிமடுத்துக் கேட்க வரும் அந்தக் கொலைவெறி..!!

எழுதி எழுதிப் பழகிடவே தமிழ் இனிக்கும் கனிதான்
ழகரம் சொல்லி சொல்லிப் பழகிடவே நீங்கும் தமிழ்ப்பிணிதான்..!!

மழையில்லை தழையில்லை பிழையுமில்லையே
வாழ்வதற்கும் புகழ்வதற்கும் வார்த்தையில்லையே..!!

அமிழ்தமிழ்து.. தமிழமிழ்து சொல்லி.. சொல்லிப் பழகு
சொல்லுகின்ற போதினிலே இனிமை தமிழ் அழகு..!!

ழகர மகுடம் சூட்டி நிற்கும்மகா ராணிஇந்தத் தமிழே - இலக்கிய
அரியணையில் வீற்றிருக்கும் தமிழுக்கில்லை நிகரே..!!
===========================================================
குறிப்பு: 14-02-2016 அன்று மாலை ஆவடியில் எழில் இலக்கியப்
பேரவை மற்றும் மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு
அறக்கட்டளை இணைந்து நடத்திய கவி அரங்கில் கலந்து
கொண்டு வாசித்த கவிதை. அழைப்பு விடுத்த விழா தலைவர்
திரு எழில் சோம. பொன்னுசாமி அய்யா அவர்களுக்கு
எனது நன்றிகள்.
=========================================================

எழுதியவர் : சொ.சாந்தி (15-Feb-16, 9:56 pm)
பார்வை : 701

மேலே