முதல் விமான பயணம்

காற்றை கிழிந்து பேரூந்து பயணம்
கல்லூரி சென்ற தருணம்
தடதட சத்தத்துடன்
இரயிலில் வெளியூர் பயணம்
நினைவுகள்
கண்மூடி திறந்த நேரத்தில்
மெல்ல வந்து போனது
ஆயிரம் எண்ணங்கள் அலைப்பாய
சில்லேன்று ஒருகாற்று வருட
உணர்ந்தேன் நான் இருப்பது இப்போது
சென்னை விமான நுழைவாயில்
வெளிநாட்டு வேலை
அதைவிட மனதில் முக்கியமாக
முதல் விமான பயணம்
வாழ்வின் பெரும் திருப்பம்
வளர்த்த பலநாள் விருப்பம்
வடிகால் கண்ட தினம்
ஆனந்தம் என்று அளவாட முடியாது
தாய், தந்தை, அக்கா, அண்ணன்,
நண்பர்கள் விட்டு
பிரிந்து செல்லும் நேரம்
இருந்தும் மகிழ்ச்சி ரேகைகள்
என் முகத்தில்
ஆயிரம் ஆலோசனைகள்
அறிந்த்ததும் சில அறியாததும்
பாஸ்போர்ட் எங்கே?
டிக்கெட் எங்கே?
லக்கேஜ் எங்கே?
அதே கேள்விகள் பலரிடம் இருந்து
விமான நிறுவன கவுண்டரில்
செய்வன செவ்வன செய்தேன்
அரசாங்க குடியேற்ற முறைகள்
முழுவதும் முடிந்தது
படியேறி வணக்கத்தைப் பெற்று
விமானத்தில் பிரவேசம்
பட்டிக்காரன் மிட்டாய் கடையைப்
பார்த்தானாம் வாசகம்
நினைவில் வர
இருக்கை அமர ஒரு பெருமூச்சு
ஆர அமர்ந்த நெஞ்சு
சீட் பேல்டின் இயக்கவியல்
இயல்பாய் அறியவிட்டாலும்
இனிதாய் முடித்தேன்
மிக கவனமாக கவனித்தேன்
பேராசிரியரின் பாடத்தைவிட
விமானப் பணியாளரின்
பாதுகாப்பு விளக்கங்கள்
ஓடுபாதையில் விமானம் வானில் ஏற
என்வாழ்வும் வளமாய் ஏறும்
எண்ணம் என்னில் எழ
கட்டங்கள் சிறுபுள்ளியாய் மாறியது
அன்புடன் அன்னை உணவு
இல்லை என்றாலும்
விமானத்தில் முதல் உணவு
இல்லை உணவு பொட்டலம்(!)
எப்போதும் கவனித்து சாப்பிடு
என்றாள் அன்னை
அர்த்தம் புரிந்தது
காலிடுக்கில் பொட்டலத்தைப்
பிரித்து சாப்பிட
நிச்சயம் தேவை
அதிக கவனம்
ரொம்ப ஆட்டம் போடாதே
சொன்ன நண்பர்கள்
ஞாபகம் இப்போது
ஆட்டம் காணும் விமானத்தில்
ஆட்டம் காணாமல்
எப்படி கழிவறை செல்ல?
ஒவ்வொரு நிமிடமும்
பயணத்தின் பரவசம்
அசர சிறு கண் உறக்கம்
எழுகையில் விமான இறக்கம்
என் முதல் விமான பயணம்
இனிதாய் முடிந்தது
எத்தனை விமான பயணங்கள்
என்றாலும் முதல் பயணம்
என் நெஞ்சில் மறையா புதினம்
- செல்வா