காமராசர்

நாட்டுக்கு நாளும் உழைத்தவர்-பல
நன்மைகள் நாட்டிலே விதைத்தவர்
வீட்டையும் மறந்து வாழ்ந்தவர்-பல
விந்தைகள் செய்தே உயர்ந்தவர்.

கல்விச் சாலைகள் அமைத்தவர்-நல்
இலவசக் கல்வியும் தந்தவர்
கொல்லும் பசியினைப் போக்கிட-மதிய
உணவுத் திட்டமும் அளித்தவர்.

தொழிலால் நாடு உயர்ந்திட –தொழிற்
சாலைகள் பலவும் அமைத்தவர்
வழிவழித் தொழிலை மாற்றிட-பல
வழிவகை அமைத்துக் கொடுத்தவர்.

பதவி ஆசையைத் துறந்தவர்-வரும்
பணத்தையும் வாழ்வினில் மறந்தவர்
உதவிடும் எண்ணங்கள் கொண்டவர்-அந்த
உணர்வினை மனத்தினில் நிறைத்தவர்.

படிக்காமல் மேதை ஆனவர்-பலர்
படித்திட வழிவகைச் செய்தவர்.
துடித்திடும் இளைஞர்கள் முன்னேற-பல
திட்டங்கள் வகுத்துக் கொடுத்தவர்.

நாட்டு நலனின் அக்கரையால்-தன்
நலன்கள் எல்லாம் துறந்தவர்
தீட்டிய திட்டங்கள் எல்லாமும்-உயர்
தேசிய நலனுடன் கலந்தவர்.

விடுதலைப் போரில் கலந்தவர்-பல
வெஞ்சிறை தனிலும் வாடியவர்
துடிப்புடன் தேசியம் காத்தவர்-வரும்
துயரங்கள் துடைத்திடத் துடித்தவர்.

காந்திய வழியினில் நடந்தவர்-அதைக்
கடமையாய் நெஞ்சினில் வடித்தவர்
மாந்தர்கள் வாழ்ந்திட நினைத்தவர்-இம்
மாநிலம் போற்றிட வாழ்ந்தவர்.

கருப்புக் காந்தி ஆனவர் –ஒரு
பொறுப்புடன் பதவியில் இருந்தவர்
வெறுப்பவர் தனையும் மதித்தவர்-அவர்
மறுத்திடும் கொள்கையை ரசித்தவர்

கர்ம வீர்ர் காமராசர்-எக்
காலமும் புகழுடன் வாழ்பவர்
தர்மத்தின் உண்மை உணர்ந்தவர்-அதன்
தன்மையால் வாழ்வினில் உயர்ந்தவர்.
*******************************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (16-Feb-16, 7:35 pm)
பார்வை : 211

மேலே