நல்லா இருப்பார்

அந்த மரத்தடி
அனேக வழிப்போக்கர்களுக்கு
நிழல் தந்தாலும்..
ஆறேழு ஆண்டுகளாக அடைக்கலம்
தந்து வருவது ஆண்டியப்பன் ஜோசியருக்கு
கிளிகள் அடைத்த கூண்டோடு
காலை எட்டு மணிக்கெல்லாம் ஆஜராகும்
ஆண்டியப்பன்.. உண்மையில் ஜோசியம்
பெரிய அளவில் ஏதும் அறியாதவர் தான் ..
என்றாலும்..
வெல்ல மண்டியில் வண்டி இழுக்கும்
வெள்ளப்பாண்டிக்கும் ..
மோட்டுத் தெரு முனுசாமிக்கும் ..
அவர் சொன்ன ஜோசியத்திற்கு பிறகுதான்
கலியாணமும் ஆச்சுதாம் ..
சொன்ன படியே ஆண் குழந்தைகளும் பிறந்ததாம்..
தெக்குத் தெரு வீரண்ணன் கூட
போன மாதம் துபாய்க்கு கட்டிட வேலை
கிடைத்து போனது ..தூர தேசத்தில்
அவனுக்கு வேலை கிடைக்கும் என்று
போன வருடமே இவர் சொல்லியிருந்தாராம்..
இரண்டு நாட்களாக அவரைக் காணாத
எனக்கும் மனசே சரியில்லை..
விசாரித்ததில் தெரிந்தது..
கோபத்தில் ஏழெட்டு வருஷத்துக்கு முன்
வீட்டை விட்டு வெளியேறிய அவர்
மீண்டும் பிள்ளையின் வீட்டோடு
போய் சேர்ந்து கொண்டாராம்..
பிள்ளை வந்து கலங்கி அழைத்த பிறகு..
இனிமேல் அவர் நல்லா இருப்பார் என்று
என் மனதில் ஒரு ஜோசியம் தெரிந்தது !

எழுதியவர் : பாலகங்காதரன் (கருணா) (19-Feb-16, 4:25 pm)
Tanglish : nallaa irupaar
பார்வை : 415

மேலே