இன்னும் கொஞ்சம் வை
நீண்ட நாள் கழித்து நண்பன் ஒருவன் எதிர் பாராத விதமாக வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டுக்காரன் மனைவியிடம் தன் நண்பனுக்கு உணவளிக்க சொன்னான்.
நண்பர்கள் இருவரும் மேஜையில் சாப்பிட அமர்ந்தனர். நண்பனுக்கு நல்ல பசி.குறிப்பறிந்த வீட்டுக்காரன் 'இன்னும் கொஞ்சம் வை,'என்று இரண்டு தடவை சொல்லி விட்டான்.
சாப்பாடு தீரும் நிலை.அடுத்த முறை 'இன்னும் கொஞ்சம் வை' என்று கணவன் சொன்னபோது,நிலையை விளக்க அவன் காலை ஒரு மிதி மிதித்தாள்.
அப்படி இருந்தும் மறுபடியும் கணவன்,'இன்னும் கொஞ்சம் வை,'என்றான்.இம்முறை சற்று ஓங்கி மிதித்துவிட்டு மீதி இருந்த சாதத்தை எல்லாம் நண்பனுக்கு வைத்து விட்டாள்.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த நண்பன் உடனே கிளம்புவதாக சொன்னான். வீட்டுக்காரன்,''இரவில் இவ்வளவு நேரம் ஆகி விட்டது.எனவே இங்கு தங்கி காலை செல்லலாமே?''என்று கேட்டான்.நண்பனோ முக்கிய வேலை இருப்பதாக சொல்லி விடை பெற்று சென்று விட்டான்.
அவன் தலை மறைந்ததும் மனைவி கணவனிடம் கோபத்துடன்,''சாதம் கொஞ்சம்தான் மீதி இருக்கிறது என்று உங்கள் காலை மிதித்து சைகை செய்தும் நீங்கள் விடாப்பிடியாக,'இன்னும் கொஞ்சம் வை'என்று சொல்கிறீர்களே,உங்களுக்கு அறிவு இருக்கிறதா?''என்று கேட்டாள்.
கணவன் பதட்டத்துடன்,''அய்யையோ,நீ என் காலை மிதிக்கவில்லையே!அப்படியானால்....ஓ,அதுதான் அவன் அவ்வளவு வேகமாக ஓடி விட்டானா!''என்றான்.