பைத்தியத்தின் தெளிவு -சந்தோஷ்
இப்படித்தான் என்னை பைத்தியனென
வர்ணிக்கிறது பைத்திய உலகம்..
அமாவசையில் நிலவில்லை என்றார்கள்
நிலவின் ஒளிதான் தெரிவதில்லை என்றேன்.
பைத்தியம் என்றார்கள்.
சூரியன் போய்விட்டது
இரவு வந்துவிட்டது என்றார்கள்.
சூரியனும் இருக்கிறது
இரவுதான் வந்தது என்றேன்
பைத்தியம் என்றார்கள்.
சாலையின் நிறம் கருப்பு என்றார்கள்.
வானச் சாலைக்கு ஏது நிறம் என்றேன்
பைத்தியம் என்றார்கள்.
பூவைப் போன்றவர்கள் பெண்கள் என்றார்கள்
ஒ. ஆண்களே! வாடவிடுவது ஏன் என்றேன்
போடா பைத்தியம் என்றார்கள்.
கற்புக்கரசி கண்ணகி தான் என்றார்கள்.
உங்கள் வீட்டு பெண்கள் இல்லையா என்றேன்.
பைத்தியமென ஏசுகிறார்கள்.
இப்படித்தான் ஒரு முறை நான்
ஒரு கவிஞன் என்றேன்.
அடடே..! உடனே உலகம் நம்பிவிட்டது.
ஒ.. !பைத்தியநிலைதான் கவிஞன் நிலையோ.?
ஆழ்ந்த வருத்தங்கள் கவிஞர்களே.!
உலகத்தை புரியவைக்க
உங்கள் பாடு திண்டாட்டம் தான்.
அய்யோ...!
நான் பைத்தியனாக இருந்துவிடுகிறேன்.
நீங்கள் கவிஞர்களாக பயிற்சி எடுங்கள்.
--
இரா.சந்தோஷ் குமார்.