மன்னியுங்கள் கவிஞர்களே - சந்தோஷ்
இயற்கையையும்
இலக்கியங்களையும்
நுகர்ந்து வாசித்த எனது
இரசனைச் சிறகுகளிலிருந்து
ஓர் இறகு பிரிந்து
கவிதைப் பறவை என்றாகியிருக்கும்.
பல நூறுகோடிகளின்
மழைத்துளியிலிருந்து
ஒரு மழைத்துளியினை
களவாடிய எந்தன்
இதயப் பாலைவனம்
இலக்கியப் பூக்களை வளர்த்திருக்கும்.
தனிமைக்கு
கற்பனையைத் துணையாக்கி
காசி நதியோரத்தில்
உலாவியப்போது
மிதந்தோடிய
அவளின் நினைவுப்
பிணங்கள்
என் காதலை நலம்
விசாரித்து பயமுறுத்தியிருக்கும்.
இப்படியாகத்தான்
யானையை நினைத்து
கழுதையை வரைந்த கதையாய்
எதையோ எழுத நினைத்து
எதை எதையோ எழுதும்
என் பேனா
இலக்கியம் படைத்துவிட்டதாக
கர்வம் கொண்டாடவும் செய்யலாம்.
என்னுள் ஒரு
கவிஞனைப்போல
ஒரு கிறுக்கன்
இருக்கின்றான்.
மன்னியுங்கள் என் அபிமானக்
கவிஞர்களே..!
**
-இரா.சந்தோஷ் குமார்
( மீள்பதிவு )