தாழ்வு மனப்பான்மை வேண்டாமே

எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை. திருவள்ளுவர், புத்தர் முதல் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் வரை அடித்துச் சொல்லும் இந்த விஷயம் எந்த அளவு உண்மை? சமீபத்தில் சில வகை எண்ணங்கள் நம் மூளையை சுருங்க வைக்கின்றன என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன என்கிற அளவுக்கு உண்மை.

மாண்ட்ரீல்(Montreal) நகரத்தின் புகழ் பெற்ற மெக்கில் (McGill) பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகளாக மூளை ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் எஸ்.லூபியன் (Dr.S.Lupien) சிலவகை எண்ணங்கள் மனித மூளையை கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை சுருங்கச் செய்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளார். தொடர்ந்து தாழ்வு மனப்பான்மை எண்ணங்களைக் கொண்டவர்கள் மூளை காலப்போக்கில் 20 சதவீதம் வரை சுருங்குகிறது என்றும் புதியன கற்றுக் கொள்வதிலும், நினைவாற்றலிலும் இத்தகைய மனிதர்கள் மிகவும் பின் தங்கி விடுகிறார்கள் என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

அது மட்டுமல்ல, தங்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதவர்கள் தீய பழக்கங்களுக்கு சீக்கிரமாக அடிமையாகிறார்கள், அந்தப் பழக்கங்களில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுகிறார்கள், கான்சர், இருதய நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு அதிகமாக ஆளாகிறார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே உங்களைப் பற்றிக் குறைவாக எண்ணுவதை நிறுத்துங்கள். தாழ்வு மனப்பான்மையைப் போல உங்களை வேறெதுவும் முடங்கச் செய்ய முடியாது. தாழ்வு மனப்பான்மை ஒரு விதத்தில் தெய்வத்தையே குறைத்து மதிப்பிடுவதைப் போலத்தான். கடவுள் பயனில்லாத மனிதர்களைப் படைத்திருக்கிறார் என்பதே அவரை இழிவுபடுத்துவது போலத்தானே.

உங்கள் தாழ்வு மனப்பான்மை சிலரை உங்களுடன் ஒப்பிட்டு உருவான ஆதாரபூர்வமான உண்மையாக நீங்கள் ஒருவேளை கருதலாம். அதையும் மேலும் ஆழமாக சிந்தித்தால் உண்மை அல்ல என்று நீங்கள் உணரலாம்.

ஒரு கோடீஸ்வரன் தன் பிள்ளைகளுக்கு நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அறிந்து அதைத் தனக்கு வேண்டியபடி பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்பவன் தன்னம்பிக்கை உடையவன், சாதனையாளன். தனக்கு சொத்து இருப்பதே தெரியாமல், சொத்து கிணற்றில் போட்ட கல்லாக எங்கோ இருக்க, வறுமையில் உழல்பவன் தன்னம்பிக்கை அற்றவன், தோல்வியாளன். எனவே உண்மையில் இருவரும் செல்வந்தர்களே என்றாலும் அறிந்தவன், அறியாதவன் என்பதில் தான் வித்தியாசம் உள்ளது.

உங்கள் சொத்து உங்களுக்குள் உறங்கிக் கிடக்கின்றது. அதை அறியாமல் உங்களிடம் ஒன்றும் இல்லை என்று முடிவுக்கு வருவது அறியாமையே. கடவுள் வெறுமைகளைப் படைப்பதில்லை. அப்படி நினைத்து அவரையும் உங்களையும் அவமதித்துக் கொள்ளாதீர்கள். தாழ்வு மனப்பான்மையால் உங்கள் மூளையைச் சுருக்கி, திறமையைச் சுருக்கி, வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடாதீர்கள். உங்களுக்கென இறைவன் உள்ளே வைத்திருக்கும் தனித் திறமையைக் கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பியுங்கள். தாழ்வு மனப்பான்மையும், தேக்க நிலையும் சூரியன் முன் பனி போல காணாமல் போவதைக் காண்பீர்கள்.

எழுதியவர் : -என்.கணேசன் (27-Feb-16, 11:08 pm)
பார்வை : 146

மேலே