ருத்திர தாண்டவத்தில்சற்றத்தைக் காத்தருளும்

திருக்கேதீச்சர நாதரே திரும்பிப்பாரும் இந்நிலையை
புரிகிறதா புண்ணியரே புலம்புகின்ற தழிழன் மொழி
புறவீதி வழியெங்கும் கருமையின் காரியங்கள்
கச்சிதமாய் நடக்கையிலே காணாமல் இருந்தீரோ?


காலனையும் காலாலுதைத்த காவியத் தலைவனே
கலியுகத்தை காக்கின்ற நெற்றிக்கண் நாயகனே
எம்மவர்கள் பலரிங்கே சிதைத்தழிக்கப் படுகையிலே
ஜந்தொழிலில் ஒன்றென்று அடக்கமாய் இருந்தீரோ?


புனித பூமியிலே புதைகுழிகள் தோண்டுகையில்
அடிமுடி தேடுவதாய் அமைதிதான் காத்தீரோ?
சிந்தை சரிந்து சிதைந்து போகையிலே
விந்தை உலகை எண்ணி வேதனைதான் கொண்டீரோ?


விசும்பி அழைக்கயிலே உம்மவள் உமயவள்
அறிவுரை சொல்லியங்கே அனுப்பிவைக்க வில்லையோ?
ஆயுதப்படை கண்டு அச்சம் மேலோங்க
அவசரகாலச்சட்ட அமுலில் அடங்கி நீர் இருந்தீரோ?


ஓலமடங்கி உடல் சரிந்து உயிர் பிரிந்தபின்
எஞ்சிய காயத்தை நயவஞ்சகமாய் புதைத்துவிட்டு
சரித்திரத்தை சாட்சிக்கழைத்து பழங்கால புதையலென
புதுக்கதை புனையும் புது நாடகத்தை கண்டீரோ


முக்காலம் உணர்ந்த முழுமுதற் கடவுளே
நெற்றிக்கண் கொண்டு குற்றத்தை வேரறுத்து
ருத்திர தாண்டவத்தில் சுற்றத்தைக்காத்தருள
விரைந்தோடி வாருமையா எழுந்தோடி வாருமையா

எழுதியவர் : சர்மிலா (2-Mar-16, 5:17 pm)
சேர்த்தது : சர்மிலா வினோதினி
பார்வை : 107

மேலே