என் இமைக்கனவுகள்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்தேன்;
நான் பிறந்த போது..
புரியாத சூழலில் வளர்ந்தேன்
அறியாத வேதனைகள்,துன்பங்கள்,துக்கங்களை
அறிய வைத்தது காலம்..

நினைத்து பார்த்தேன்..
உலக வாழ்விற்கு தான் பொருள் வேண்டும்..
என் கற்பனைக்கு அல்ல..
வாழ துவங்கி விட்டேன்..என் கற்பனை வாழ்வை..
தினமும் வளர்கிறேன்..இமை மூடா பகல் கனவுகளுடன்..

இன்று என் கனவுகள் வளர்கின்றது..வானத்தை விட நீளமாய்..

எனக்கென ஒரு வீடு; புது கிரகத்தில்
எனது கற்பனை பெற்றோருக்கு ஒரே மகளாய் நான்..
கண்ணின் இமை போல், பூவின் மது போல்,
அன்பில் நனைந்து வளர்கிறேன்
அவர்களின் செல்ல மகளாக..
விளையாட்டு தோழனாக ஒரு நாய்க்குட்டி,,

முதன் முதலாக செல்கிறேன் பள்ளிக்கு..
வரவேற்கிறது வகுப்பறை..
இயற்கை பாடத்தை படித்த எனக்கு புத்தக பாடம்..
மண்ணில் விளையாடிய என் கைகளில் எழுதுகோல்..
பென்சிலுக்கு சண்டை; அழிப்பனுக்கு அடி
மோதலில் மைக்குளியல்;ஆசிரியரின் அர்ச்சனை;
தேர்வு பிசாசுகள்;மதிப்பெண் எமன்
பிறந்த நாள் கொண்டாட்டம்;விடுமுறை ஆர்ப்பாட்டம் என
தொடர்கிறது என் பள்ளிப்பயணம்..
பள்ளி இறுதி நாள்..
எண்ணற்ற நினைவுகளுடன் நகர்கிறேன் வீடு நோக்கி..

விடுமுறை நாட்கள்;கல்லூரி கனவுகளுடன்..

கல்லூரி முதல் நாள்..
மூத்த மாணவர்களின் விளையாட்டு மிரட்டல்
புதிய நண்பர்கள்;புதிய தோழிகள்
புதிய பாடம்;புதிய இடம்
என புதிய அனுபவம் எனக்குள்..
சின்ன கோபங்கள்;பெரிய சண்டைகள்
பலவகை விருந்துகள் சின்னப்பெட்டிக்குள்..
அர்த்தமற்ற அழுகை;அமைதியான நூலகம்;
மைதான மரங்கள்; கலகலப்பான கல்லூரி பேருந்து;
காதல் விண்ணப்பங்கள்;கடிதங்கள்
அனைத்தையும் தாண்டி செல்கிறது என் நாட்கள்..
முடிவு ஒன்றிற்கு தான் முடிவு இல்லை..
என் கல்லூரி வாழ்வும் முடிகிறது அன்றோடு..
கனவுகள் சுமந்த என் கண்களில் கண்ணீர்..
விடைபெற்று செல்கிறேன் விரிசல் விழுந்த மனதுடன்..

எனக்கென ஒருவன்..
என் இதயத்தில் நுழைகிறான்..
கேட்டுப்பார்க்கிறேன்;என் காதல் என்கிறான்..
உன் துணையாய் வருவேன் என விரல் பிடித்து நடக்கிறான்..
நானும் நடக்கிறேன் அவனுடன்;பாலைவனச்சோலையில்..
புதுவிதமான இன்பத்தை அனுபவிக்கிறது என் மனம்;
இன்பத்தின் அடையாளமாய் ஒரு இளவரசன்..
தனி ஒரு தேசம்;அதில் நாங்கள் மூவரும்..

காலம் கடக்கிறது..
இப்பொழுது நானும் அவரும் சிறுகுழந்தை மனதுடன்..
அன்பின் இலக்கணத்தில் அமைதி வாழ்க்கை..

ஒரு நாள்..
இரவு முழுவதும் நினைக்கிறோம்
எங்களின் மலரும் நினைவுகளை..
சிறியதாய் ஒரு மௌனம்..
நிலவின் இரவு நேரக்காவலில் உறங்குகிறோம்..
விடிந்தது..
அழைக்கிறார் என்னை.. நான் எழவில்லை..
புரிந்தது அவருக்கு..நான் காற்றில் கலந்து விட்டேன் என்று;

நான் கரைந்தாலும் என் நினைவுகள் என்றும் கரையாது..
முடித்து விட்டேன்..என் கற்பனை வாழ்வை என்னுடன் சேர்த்து..

என்றும் அன்புடன்
இனியகவி.

எழுதியவர் : இனியகவி (2-Mar-16, 5:09 pm)
சேர்த்தது : இனிய கவி
பார்வை : 164

மேலே