ஒரு புள்ளியில்

பூக்குது கருவேப்பிலை மரம்
வண்டொன்று சுற்றிப் பாக்குது

பட்டாம் பூச்சி வலம் வரும்
காய்கள் தோன்றிப் பழம் தரும்
குயில்கள் மைனா குருவிகளுடன்
அணிலும் தாவித் தாவித் தவழும்

ஒரு உருவம் சிறுத்த குருவி
குடும்பம் பெருக்கி குதூகலிக்கும்
ஒரு பருவம் ஓடித் தேய்ந்துவிடும்
மரத்தில் மொட்டு மீண்டும் வரும்.
***
பத்தாயிரம் வருடங்களில் சூரியனை
ஒரு சுற்று வருதாம் ஒரு கோள்
பத்துமடங்கு பூமிவிடப் பெரிதாம்
இன்னும் எத்துனை இது போல்?

ஒன்றை ஒன்று பற்றிப் பிரியாமல்
எத்தனைக் கோடி உயிரினங்கள்
ஒன்றை ஒன்று தள்ளியும் பிணைந்தும்
எத்தனை கோடி சலனங்கள்

இதற்கும் அதற்கும் எதற்கோ பந்தம்
தள்ளியும் அணைத்தும் தகராமல் ஓரு
புள்ளியின் நிமித்தம் சுற்றிக் கழறாமல்
அலைவரிசையில் அடங்குது எல்லாம்

தேடிக் கண்டெனில் பெரிதோர் ஞாலம்
தேடாதெனில் அதெனினும் பெரிது
ஒற்றைப் புள்ளியில் அடங்கிடும் யாவும்
ஒட்டாதிருந்தால் புள்ளியில் பூக்கும் யாவும்.

----- முரளி

எழுதியவர் : முரளி (2-Mar-16, 4:51 pm)
சேர்த்தது : முரளி
Tanglish : oru pulliyil
பார்வை : 90

மேலே