மேகமற்ற வானம் ஒன்றின் கீழ்

ஏதுமற்ற பகல்வெளியில்
பெரும் தாகம்
நிறைந்தவனாய் நடக்கின்றேன்

திக்குத் தெரியாமல்
நடைபோடுகின்றன கால்கள்
வெயில் ஒன்றே
புலப்படுகின்றது விழிகளுக்கு

நிழலும்
என் காலடியின் கீழ்
தஞ்சம்புக தவிதவிக்கின்றது

நீரெனப் படுகின்றது நெடும் சாலை
நிதர்சனம் ஏதுமில்லை அங்கே

காணாமல் போய்விட்ட காற்றை
நாசி தேடி இழுத்து
சுவாசப் பெருமூச்சிடுகின்றது

வாகன ஒலியின்
பேரிரைச்சல்
எனை மெல்லமெல்ல
கொன்று திண்கின்றது

தேகத்தீ
எண்ணையின்றி எரிய
குடல் சுருங்கி
கருகிக்கொண்டிருக்கின்றது

வெளியோடு
வெளியாகிப் போய்விடுவேனோ
என்ற அச்சம் மனம் சூழ
பசியெனப்பட்டதை
முதன்முறை உணர்கின்றேன் நான்

பெருமரத்தினில் பூத்து
சுக நிழலினில் குளுங்கிச்சிரித்து
காயாகிப் பழுத்து
சதை கவ்வப்பட்டு
தனித்துவிடப்பட்ட
விதை என்னும் நான்
மேகமற்ற
வானம் ஒன்றின் கீழ்
தாகம் நிறைந்தவனாய்
சிறு மழை
நோக்கி ஓடுகின்றேன் இன்று!

எழுதியவர் : வெ. கண்ணன் (2-Mar-16, 11:06 pm)
சேர்த்தது : வெ கண்ணன்
பார்வை : 270

மேலே