நான் உன் ரசிகனே
வளைந்த புருவத்திற்கு வார்த்தைகள் இல்லை என்னிடம்
வளையோசை சந்தத்தில் கவிதை பாடுது
குவிந்த உன்னிதழுக்கு நான் சொற்கள் தேடுகிறேன்
உன் புன்னகையே அங்கே மௌனக் கவிதை எழுதுது
கவியும் கண்ணிமைகளுக்கு புதிதாக ஒன்று யோசிக்கிறேன்
அந்திப் பொழுதே அங்கே வந்து ஆராதனை செய்யுது
நடந்த உன்பாதச் சுவடுகளை நான் தொட நினைத்த போது
ரோஜா மலர்கள் அதில் தன்னிதழ்களைத் தூவுது
இயற்கையே ஒன்று கூடி உன்னை பாராட்டும்போது
என்ன எழுதுவது என்று நான் திகைத்து நின்றேன்
மொழிகளுக்கு அப்பாலான உன் புன்னகை மௌனமும் விழியும்
என்னுள்ளே ஏதேதோ வண்ணக் கவிதை எழுதுது
கவிதையாகவும் கவிஞையாகவும் நீயே இருக்கையில்
நான் என்ன எழுதுவது நான் உன் ரசிகனே !
----கவின் சாரலன்