ஆற்றல் ஞாயிறு என் வாழ்வில் திருக்குறள் டாக்டர் அப்துல் கலாம்

குறள்

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின் (547)



பொருள்:

முறைப்படி, சமத்துவமாக, மனித நேயத்துடன் உலகத்தை காக்கும் தலைவனுக்கு, ,அவனது முறையான ஆட்சி முறையே காவல் அரணாக விளங்கும்.

விளக்கம்:

என் வாழ்க்கையில் நடந்த இனியதொரு சம்பவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது உயர்நிலை பள்ளியில் மாணவர் தலைவனாக இருந்த என்னிடம் நள்ளிரவு கொடி ஏற்றத்துக்கு மாணவர்களைத் திரட்டி வரும்படி பள்ளி ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். நானும் அப்படியே செய்தேன். அன்று நள்ளிரவு டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த நேரு ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசியதை என்னுடைய ஆசிரியர் அய்யாதுரை சாலமன் ரேடியோவில் எங்களை எல்லாம் கேட்க வைத்தார். எங்களை மட்டுமல்ல; இந்தியப் பெருநாட்டின் அனைத்து மக்களுடைய கண்ணிலும் ஆனந்த கண்ணீர் வரவழைத்த சம்பவம் அது.

அடுத்த நாள் பத்திரிகையில் இரண்டு படங்கள் பிரசுரமாகி இருந்தன. அதில் ஒன்று நள்ளிரவில் நேரு தேசியக் கொடி ஏற்றுவது, இன்னொன்று நவகாளியில் நடந்த மதக் கலவரத்தை நிறுத்த மகாத்மா காந்தி வெறும் காலில் நடந்து சென்ற காட்சி. அந்த நள்ளிரவு உரையும், காந்தியின் சேவையும் எங்களின் தேசப் பற்றை உச்சிக்குக் கொண்டுச் சென்றது. இதுபோன்ற தலைவர்களின் முறையானச் செயல்பாடுகளால்தான் இந்தியா விழித்தெழுந்தது.

இந்தியாவில் ஆட்சி அதிகாரத்துக்கு வருபவர்கள் இந்தத் திருக்குறளில் சொல்லப்பட்ட அறக் கருத்துகளையொட்டிய சிந்தனையுடன் திகழ வேண்டும என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு.



குறள்

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா அரண் (421)



பொருள்:

மனித வாழ்வில் எத்தனையோ தீங்குகள் நேரலாம். அவற்றை எல்லாம் வராமல் தடுப்பதற்கும், வந்துவிட்டால் விடுபடவும் நல்லதொரு கருவியாக திகழ்வது அறிவுடமைதான். மேலும் பகைமை உள்ளே புகுந்து அழிக்க முடியாத கோட்டை சுவராகவும் அறிவு நிலைத்து நிற்கும்.

விளக்கம்:

ஒவ்வொரு மனிதனையும் எல்லா தருணங்களிலும் அறிவுதான் காப்பாற்றும் என்பதை வலியுறுத்த, எனது விஞ்ஞான ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் இந்தத் திருக்குறளை எங்களுக்கு சொல்லிக் காட்டுவார். பின்னாட்களில் எனக்கு வானவியல் துறையில் ஆர்வம் ஏற்படுவதற்கு அந்த சிறு வயதிலேயே என் மனதில் விதை தூவியவர் அவர்தான்.

அவர் வகுப்பறை கரும்பலகையில் பறவையின் படம் வரைவார். அந்தப் பறவையின் உடல் பகுதி, வால், றெக்கைகள், அதன் மேல் நோக்கிய அலகு போன்றவற்றையெல்லாம் வரைவார். அது எப்படி மேலெழுந்து பறக்கும்? அது திசை திரும்ப என்ன செய்கிறது என்பது பற்றியெல்லாம் விளக்கமாக பாடம் எடுப்பார்.

கரும்பலகையுடன் நின்றுவிடாது அவரது அறிவு புகட்டும் ஆற்றல், அடுத்து எங்களையெல்லாம் கடற்கரைக்கு அழைத்துச் செல்வார். அங்கே உட்கார்ந்திருக்கும் பறவைகளை சுட்டிக் காட்டி ‘‘அதோ அந்தப் பறவை எழுந்து பறப்பதை பாருங்கள். அது பறக்கும்போது அதன் உடல் அமைப்பு எப்படி மாறுகிறது? அது எப்படி கால்களை உந்தித் தள்ளுகிறது? றெக்கையை எப்படி விரிக்கிறது என்று உற்று கவனியுங்கள் என்று எங்களை ஊக்கப்படுத்துவார். அப்படி அவர் என் இளம் வயதில் ஊன்றிய நல்விதைகள்தான் பின்னாட்களின் ஆகாய விமானம், ராக்கெட், ஏவுகணைகளைப் பற்றியெல்லாம் ஆய்வுசெய்வதற்கு அடித்தளமாக அமைந்தன. எப்போதும் எனது செயல்பாடுகளுக்கெல்லாம் அரணாக இருந்தது அறிவுதான் என்பதை என்னை உணரச் செய்யும் திருக்குறள் இது.

- நிறைந்தது

எழுதியவர் : (7-Mar-16, 6:06 am)
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே