பயணம்

அடுத்த கொண்டைஊசி வளைவு
திரும்பியதும் சிற்றுந்தை அவசரமாய்
நிறுத்தச் சொல்லி ஆறுவயது அகிலேஷ்
உட்பட ஆடவர் எல்லாம் இறங்கி
தேவதாரு மரங்களுக்குப் பின்னால்
மறைந்து கொண்டார்கள்..
கொஞ்சம் புத்துணர்வு பெற
இழுத்துவிட்ட புகையும் மறைய
போகலாம் ரைட்..என்று ஆண்கள்
ஏற வண்டி புறப்பட்டது..

அதிகாலை மூன்று மணிக்கு
எழுந்து சமைத்த உணவுகள்
எப்போது பரிமாறுவோம்
என்கிற இல்லத்தரசிகளின் சிந்தனை..
இளையராஜா இசை
அலைபேசியின்
மின்கலக் குறைவால்
நின்று போகக் கூடாதென
இளம்பெண்டிரின் கவலை..
அகிலேஷ் இறங்கியபோதும்
தன்னை இறங்க விடாத
அவனையொத்த வயதுடைய
அமுதாவின் கோபம்..

குதூகல உரையாடல்களோடு
ஒன்றரை மணிநேரத்தில்
அடையவிருக்கும்
ஊரின் உணவுவிடுதியில்
சுத்தமான கழிப்பறை
இருக்குமா என்ற கேள்வியும்
அங்கு புகைப்படக் கருவியின்
ஒளிந்திருக்கும் கண்கள் இல்லாதிருக்க
வேண்டுமே என்கிற பயம்கலந்த
சிந்தையும் ஓடிக்கொண்டிருந்தது
மகளிர் மனதில்...

எழுதியவர் : ஜி ராஜன் (8-Mar-16, 1:39 pm)
Tanglish : payanam
பார்வை : 96

மேலே