கோவில் வருமானம் கோவிலுக்கே உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

9 மார்ச்சு 2016

சென்னை:

'கோவில் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை, கோவில் பராமரிப்புக்கே செலவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த குப்புசாமி என்பவர், தாக்கல் செய்த மனுவில், 'பெருந்துறையில், செல்லந்தி அம்மன் கோவில் உள்ளது; கோவில் இடத்தில் கட்டப்பட்ட கடைகளை, ஏலத்தில் விட்டு, சந்தை விலையில், வாடகையை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

கடவுளுக்கு பாத்தியப்பட்ட நிலங்களும், தற்போது பிரச்னை யில் உள்ளன; கடவுளையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள கோவில்கள், வரலாற்று சின்னங்களாக திகழ்கின்றன; அவை, சமூகத்தின் சொத்துக்கள். கோவில் நிலங்களில் ஆக்கிரமித்து, வாடகை கொடுக்காமல் மோசடி செய்கின்றனர்.

உண்டியல் உடைக்கப்படுகிறது; நகைகள் திருடப்படுகிறது; விலை மதிக்க முடியாத புராதன பொருட்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இது தான், கோவில் சொத்துக்களை கையாளும் விதம். இதனால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. கோவில்களில், பூஜை காரியங்கள், விழாக்களுக்காக, அரசர்களும், ஜமின்தார்களும், தானமாக வழங்கிய நிலங்கள் மற்றும் சொத்துக்களை பலர் ஆக்கிரமித்து, வருமானத்தை முழுங்கி கொண்டு இருக்கின்றனர். கோவில் நிலங்களை மீட்கவோ, வாடகையை நிர்ணயிக்கவோ, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாடகைக்கு இருப்பவர்கள், உள்வாடகைக்கு விடுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கோவில்கள், மடங்களுக்கு, ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களும், இதர நிலங்களும் உள்ளன. வருவாய் நீதிமன்றங்கள் செயல்படாததால், குத்தகை நிலங்கள் மற்றும் வாடகை நிலங்களில் இருந்து, வருமானம் பெற முடியவில்லை.
பெரும்பாலான கோவில்களுக்கு, கணிசமான வருமானம் வருவதற்கு ஆதாரங்கள் இருந்தும், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்து அறநிலையத் துறை சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அப்போது தான், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.

எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது; எவ்வளவு செலவிடப்படுகிறது என்பதை கணக்கிட, பல ஆண்டுகளாக வெளிப்புற தணிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே, கணக்கு வழக்குகளை முறையாக பரிசீலித்து, நிர்வகிக்க, வெளியில் இருந்து ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும்.
கோவில் சொத்துக்களில் இருந்து வசூலிக்கப்படும் பணத்தை, கோவில்களின் பராமரிப்புக்கு மட்டுமே செலவிட வேண்டும்; வேறு காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. வருமானம் இல்லாத சிறிய கோவில்களை, வருமானம் கிடைக்கக் கூடிய பெரிய கோவில்கள் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (9-Mar-16, 7:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 429

மேலே