உன் நினைவு

உன் நினைவு ........

உதறி உதறி
மடித்து வைக்கிறேன்
களைந்து மீண்டும் கண்முன்னே விரிகிறது

வெட்டி வெட்டி அடுக்கி
விறகாக்கி கட்டுகிறேன்
இறங்கி போய் மீண்டும் விருட்சமாகி விடுகிறது

நீரூற்றி நீரூற்றி சம்பலாக்குகிறேன்
திக்கென்று பற்றிக்கொண்டு
மீண்டும் வான் முட்டும் பெருந்தீ ஆகிறது

இடித்து நொறுக்கி
தரை மட்டமாக்குகிறேன்
சேர்ந்து உயர்ந்து மீண்டும் மாளிகையாகிவிடுகிறது

அடுத்து என்ன செய்ய போகிறாயென
என்னை பார்த்து எக்காளமிடுகிறது
உன் நினைவு .............

கைவசம் மிச்சமிருப்பது
கொஞ்சம் கற்பனையும்
பாதி எழுதப்பட்ட சில கவிதைகளும் தான்...
இனி தான் யோசிக்க வேண்டும்
அடுத்து என்ன செய்வதென்று .....


-டயானா

எழுதியவர் : மேரி டயானா (14-Mar-16, 2:01 pm)
பார்வை : 296

மேலே