மாக்களே மக்கள்

பட்டனவாழ்க்கை மெத்த கசந்து,
போனேன் அதனின் எல்லை கடந்து !
பசைவயல்கள் கண்ணைப்பறிக்க,
பயணப்பட்டேன் மெல்ல நடந்து !
பெருமிதம் என்னுள் பொங்கி எம்பிட,
சாய்ந்து எழுந்தேன் புல்லில் கிடந்து !
பேடைகள்தன்னின் குரலைக்கேட்டு,
நெஞ்சுகுளிர்ந்தேன் விண்ணை அளந்து !
கருமேகங்கள் கவரிகள் வீச,
காற்றில் கலந்தேன் எண்ணம் தொலைந்து !
மலைச்சாரல் பொழியத்துவங்க,
காட்டில் அலைந்தேன் தேகம் களைத்து !
தூரத்தில் ஓர் ஓலைக்குடிசை,
பார்த்து ஓடினேன் கொஞ்சம் மகிழ்ந்து !
உள்நுழைந்து அடைக்கலமாக,
தண்ணீர் புகுந்தது தரையில் தவழ்ந்து !

ஜோடிக்குயில்கள் ஜன்னல்வழியே,
வந்து அமர்ந்தது உச்சி குளிர்ந்து !
அடுத்ததாய் இரு கோழிகள் வந்தது,
ஆசனங்கொண்டது மூலையில் அமர்ந்து !
பின் இருமாடுகள் குதிரைகள் கழுதைகள்,
நின்றது வந்து அதனினை தொடர்ந்து !
மாடப்புறாக்கள் மான்கள் விரட்ட,
வந்தடைந்தது தரையில் படர்ந்து !
இனிமேல் இங்கே இடமே இல்லையே,
சிந்தனை போனது என்னைப்பிரிந்து !
அப்பொழுது ஒரு தெருநாய் நுழைய,
எல்லாம் ஒதுங்கி அதனைப்புரிந்து !

சற்றுநிமிடத்தில் மழையும் வெறிக்க,
தயாராகினோம் காட்சி மலர்ந்து !
அந்தநேரத்தில் தடியுடன் வந்தான்,
குடிசைக்காரன் எங்களை இகழ்ந்து !
அத்தனை உயிரையும் விரட்டியடித்தான்,
ஆணவம் கொண்டு தன்னிலை மறந்து !
என்னடா இது அசுரத்தன்மை,
என்று வினவினேன் அவனை முறைத்து !
எந்தன் இடமிது வெளியில் செல்லடா,
என்று உரைத்தான் மெல்ல நகைத்து !
அந்த இடம்விட்டு தூரமாய்ச்சென்று,
யோசனை செய்தேன் அவனை நினைத்து !
ஐந்தறிவு கொண்ட ஜீவனின் ஒற்றுமை,
கூட நிற்க்கிறதென் மார்பு துளைத்து !
எதனால் இங்கே மனிதத்தை நாம்,
இழந்துவிட்டோம் வீதி தொலைத்து !
ஆறறிவு கொண்டவன் செயலா இது?
கேள்விகள் கேட்டேன் விம்மி மலைத்து !
மனிதநேயம் மறந்த உடல்கள்,
வாழ்வது எதற்கு வீணாய் பிழைத்து !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Mar-16, 9:20 pm)
பார்வை : 39

மேலே