நந்தவனம்

அழகான தோட்டத்தின்
மத்தியில் வீடு
அதில்
ஆடிப்பாடும் தென்னங்காற்று
அதிகாலை சூரியனுக்கு முன்
ஆலோலம் பாடும் குயில்
டக் டக் என மரத்தை துளைத்து
மரங்கொத்திப் பறவை மனத்தையும் துளைக்கும்
மணி 6 ......
வீட்டு மாடியின் முற்றத்தில்
மாநாடு போடும் கிளிக்கூட்டம்
வாழை மரத்துக்கும்,மா மரத்துக்கும்
மாறி மாறி பயணம் போகும்
அணில் கூட்டம்
கணக்கிலடங்கா மலர்ச் செடிகளில்
இருக்கும் பட்டாம்பூச்சிக் கூட்டம்
பிடிக்க நான் யத்தனித்தால் பறக்கும்
ரீங்காரமிட்டு செல்லும் வண்டுகள்
மெல்ல மெல்ல அவிழும் மலர்கள்
வாசம் தேடிவந்து விடியலை வாசிக்கும்
சுவற்றின் மூலையில் தேனிக்கள்
சுகமாய் எழுப்பிய தேன் கூடு
எங்குமே காணாத சிட்டுக்குருவி
எங்கள் வீட்டில் எப்போதுமே தஞ்சம்
எங்கிருந்தோ வரும்
வெளிநாட்டுப் பறவைகளுக்கும்
என் வீட்டு மரக்கிளைகள் புகலிடம்
அந்தி சாயும் நேரம்
அழகாக மலர்ந்திடும் அல்லிகள்,
ஆகாசமுல்லை,மல்லி,முல்லை.......
காலையில் கவர்ந்திடும்
ரோசா,செம்பருத்தி,பாரிஜாதம்.......
கணக்கிலடங்கா என்
கண்மணிகள்
மலர்ச்செடிகள்,காய்கறிச் செடிகள்
மூலிகை செடிகள்,பழ மரங்கள்
பறைவகளுக்கு எங்கள்
விலாசம் உறைக்குமோ...
புறாக்களின் கூட்டம்
பொதுக்கூட்டம் போடும்
மைனாக்கள் இசைப்பாடும்
காக்கைகள் உபசாரம் செய்யும்
நத்தைகள் தத்தை பயிலும்
இன்னும் சொல்லா
இனங்களின் எண்ணிக்கை நீளும்
அத்தனை உயிரினங்களும்
உறவு கொண்டாடிடும்
அழகிய நந்தவனமாய்
எங்கள் இல்லம்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (29-Mar-16, 2:10 pm)
Tanglish : nanthavanam
பார்வை : 380

மேலே