எழுத்தில் கோத்த மலர்கள்
பிடித்த கவிதைகள்.
வேர் இல்லாததை விருட்சம் ஆக்கியும்
ஊரில் இல்லாததை உலகம் பார்க்கவும்
யார் வந்து படித்தாலும் புரியும் வண்ணம்
நார் கொண்டு கோத்த மலர்கள்.
படிப் படியாகக் காதலைச் சொல்லிட
அடிமைத் தனத்தை அடியோடு அழித்திட
வடித்திடும் அழகினில் வம்புகள் இன்றியே
படைத்திடும் பாக்களில் பரமனைக் காட்டும்
கண்கள் எனதைக் கேளாமல் கைது செய்யும்
வண்ணக் கவிதைகள் அன்பு இதயங்களின்
காதல் உதயங்களை பாதகமின்றி ஒலித்து
நாதச் சிரிப்பினை நரம்புக்கு உணர்த்தும்
அமாவாசை நிலவின் நிழலான உருவில்
சமாதானம் புலரும் சுற்றுச் சூழலில்-சுகமாய்
வாழ நினைக்கும் எண்ணக் கோலங்களை
ஆழமாய் அமிழ்த்தும் மகிழ்ச்சிக் குமிழ்கள்.
உயிரற்ற உடம்பில் உயிர்ச்சூடெனப் பயணிக்கும்
பயின்ற இராகங்கள் பிண்ணனி இசைக்கையில்
இன்பக் கிளர்ச்சியை இயன்ற வரையிலும்
பொன்னான கையாற் காக்கும் பொக்கிஷங்கள்