பின் நினைவுத்தனம்

எட்டு வயதில் காசில்லை என்று
வெளியே விரட்டி விட்டு
கரகாட்டக்காரன் படம்
பார்த்தார்களே அப்போது கண்டேன்
முதல் மரணத்தை...
உறவினர்கள் அனைவருக்கும்
துணி எடுத்து விட்டு
பத்து வயது சிறுவன் நான்
நடுவில் அமர்ந்திருப்பதை
கண்டுகொள்ளாமல்
சந்தோசம் பகிர்ந்தார்களே.. அப்போது
இரண்டாவது மரணம்...
ஊரே திருவிழாவுக்கு
குடும்பத்தோடு போகையில்
நான் மட்டும்
எதிர் வீட்டுத் திண்ணையில் தனியே
சுருண்டு கிடந்தேனே
அது 14 வயது மரணம்...
யாரோ செய்த தவறுக்கு
காரணமே இல்லாமல் பொய்
சாட்சியங்கள் கூடி
என் 18 வயதை சிதைத்த
முரண்பட்ட மரணத்தை
இன்னும் உணர்கிறேன்...
நண்பன் என்று நம்பியவன்
வீட்டு வரண்டாவில் வைத்து
சோறு போட்டு, இன்று
பிச்சைக்காரர்களுக்கும் இல்லாதவர்களுக்கும்
சோறிடுவது நலம் என்றானே...
அது 25 வயது மரணம்...
உயிர் என்று சொல்லி
ஆன்மாவுக்குள்
புதைந்து பின் ஒரு நாளில்
வெறும் பெயராகிடும்
புள்ளிக்குள் அவள் நின்று விட்டபோது
மிச்ச மரணத்தோடு
வெறித்தேன் எனது 30 வயதை...
இன்னும் இன்னும் நிரம்ப
ததும்ப வந்து சேரும் மரணத்துக்கு
ஒத்திகை பார்த்து ஒய்யாரமாய்
ஒடுங்கி நடுங்குகிறது
இதோ இந்த வயதும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (3-Apr-16, 11:27 am)
பார்வை : 88

மேலே