கல்விக்கு பெண் அழகு

எழில் கொஞ்சும் அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் அறிவில் சிறந்தவள் என்று அனைவரிடமும் பாராட்டு பெற்றவள். ஆனால் அவளுக்கு அழகு கொஞ்சம் குறைவுதான். மது பழக்கம் உள்ள அவள் அப்பா , கூலி வேலைக்கு போகும் அவள் அம்மா, கொஞ்சி விளையாட அவள் தம்பி இப்படி வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. மதுவுக்கு அடிமையான அப்பா அவளின் ஆறாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிந்த உடன் இறந்துவிட்டார். அவளின் ஆறாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வும், அவளின் குடும்பத்தின் வறுமையும் சேர்ந்தே ஆரம்பம் ஆனது. கூலி வேலைக்கு போகும் அவளின் அம்மாவுக்கு குடும்ப பாரம் அதிகமானது. இப்படியே அவளின் பள்ளி வாழ்க்கை சென்றது. அரசு பள்ளி என்பதால் படிப்புக்கு அதிகம் செலவு ஆகவில்லை. பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாக வந்தாள் அவள். பத்தாம் வகுப்பு விடுமுறையில் அம்மா உடன் கூலி வேலைக்கு போகவும் செய்தாள்.
பதினோராம் வகுப்பு சேர்வது என்பது ஒரு சவாலாக இருந்தது அவளுக்கு. ஏழு கிலோமீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய கட்டாயம். கூலி வேலைக்கு செல்லும் அவளின் அம்மாவிடம் பல்வேறு கதைகள் வந்தன “ என்னடி இந்த செய்தியை கேட்டியா கூலி வேலை செய்யும் இவளுக்கு புள்ளைய படிக்க வைக்கனுமாம் “, வயசுக்கு வந்த பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்காம பள்ளிக்கூடம் கேட்குதாம் இவளுக்கு“ , “இன்னொருத்தன் வீட்டுக்கு போய் அடுப்புல சோறு செய்றதுக்கு எதுக்குடி பள்ளிக்கூடம் கேட்குது”, “ இவ கூட வந்து கூலி வேலை செஞ்சா கூட சோத்துக்கு காசு கிடைக்கும் “
இதை கேட்டு அவள் அம்மா மனம் தாங்காமல் அழுதுகொண்டே மாலை வீடு வந்து சேர்ந்தாள். இந்த செய்திகளை கேட்டு அவளும் அழுதாள். இதனால் அவளுக்கு படிப்பு மேல் உள்ள ஆர்வம் அதிகமானதே தவிர குறையவில்லை. பன்னிரண்டாம் வகுப்பிலும் பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள் அவள். இதற்கு மேல் எப்படி படிக்க வைப்பது என்று அவள் அம்மா பல்வேறு சிந்தனைகள் செய்தாள் இறுதியில் படிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாள். ஆனால் என்ன படிப்பு படிக்க வைப்பது , எங்கே படிக்க வைப்பது, என்று எதுவுமே அவளின் அம்மாவுக்கு தெரியாது.
கடைசியில் ஒரு வழியாக ஒரு கல்லூரியில் சேர்ந்தாள் அவள். கல்விக் கடனைப் பெறுவதில் பல்வேறு சவால்களைச்சந்தித்து இறுதியில் கல்வி கடனைப் பெற்றாள். அம்மாவை பிரிந்து விடுதியில் தங்கி படிப்பது அவளுக்கு இதுவே முதல் முறை. அவள் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பு படித்ததால் அங்கு ஆங்கில வழியில் நடத்தப்படும் பாடங்களை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே முதல் பருவத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை. மேலும் கல்லூரி சென்ற பிறகுதான் மெட்ரிக்குலேஷன் ,CBSE, ICSE போன்ற பல்வேற வகையான பள்ளிப்படிப்புகள் இருப்பதையே அவள் அறிந்தாள். இவ்வாறு கல்வியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பணத்தின் அடிப்படையில் இருப்பதை கண்டு மனம் வருந்தினாள் அவள். தன் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு அயராது உழைத்து நல்ல முறையில் படித்து கல்லூரியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள். மேலும் கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று நல்ல பணியில் சேர்ந்தாள். இதை கண்டு அந்த கிராமத்து மக்கள் அவளையும், அவள் அம்மாவையும் பாராட்டினார்கள். மேலும் அவள் “நான் பெற்ற துன்பங்களை இனி யாரும் பெற வேண்டாம் என்று” பல்வேறு வகையான உதவிகளை படிக்கும் மாணவர்களுக்கு செய்து வருகிறாள்…

எழுதியவர் : ராஜு முருகன் (6-Apr-16, 2:03 pm)
சேர்த்தது : ராஜு முருகன்
Tanglish : kalvikku pen alagu
பார்வை : 2786

மேலே