நன்றிக்கடன்
நீல வானில் சித்திரை நிலவு சிரித்துக் கொண்டிருந்தது .வெண்ணிலவொளியில் , பாதையோரம் அமர்ந்திருந்த மாயம்மாவைப் பார்த்து விட்டாள் வர்ஷா . வறுமையின் ரேகைகள் முகமெங்கும் பரவியிருந்ததைக் கண்டாள் . ஒரு கணம் அவள் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.
ஜீன்ஸ் பேன்ட் , ஷர்ட் , கூலர்ஸ் சகிதம் டூ வீலரில் சென்று கொடிருந்தாள் வர்ஷா .மொபைல் ஒலித்தது . மறுமுனையில் அமுதன் !
" வர்ஷா ! ஈவினிங் உன் தம்பியோடு 'காஃபி டே ' வா , ஒரு முக்கியமான விஷயம் பேசணும் "
சொல்லிவிட்டு கட் செய்துவிட்டான் .
ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் , லெகிங்ஸ் அணிந்து தம்பி நரேஷுடன் கிளம்பினாள் வர்ஷா . காஃபி குடித்தபடியே அமுதன் ஆரம்பித்தான் .
" வர்ஷா ! நம்ம லவ் பத்தி அம்மாகிட்ட சொன்னேன் . அம்மாவுக்கு 'ஓ.கே '. உன் போட்டோ கேட்டாங்க .எங்கம்மா கிராமத்து மனுஷி . பழமையில் ஊறினவங்க . கலாச்சாரத்துல ஒன்றிப் போனவங்க . அழகா புடவை கட்டி அவங்களுக்குப் பிடிக்கிறாப்பல ஒரு போட்டோ எடுத்துக்
கொடு !"
வீட்டுக்கு வந்தவள் 'உம்'மென்று இருப்பதைப் பார்த்து வேலைக்காரி மாயம்மா , "ஏம்மா டல்லா இருக்க ?" என்று கேட்க , விஷயத்தைச் சொன்னாள் .
" இதுக்காம்மா கவலைப்படறே ? நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுந்திரு .நான் உனக்கு சேலை கட்டிவிடறேன் . நாளைக்கு மார்கழி பொறக்குதுல்ல ....? வாசல்ல பெருசா கோலம் போட்டு காவி பார்டர் கட்டுறேன். நீ கோலம் போடறா மாதிரி போஸ் கொடுத்து படம் புடிச்சுக்கோமா ! "
கீழ்வானில் செங்கதிரோன் தலைகாட்டும் வேளை வாசலில் மாயம்மா கோலம் போட்டு முடித்து விட்டாள். வர்ஷாவுக்கு அழகாக புடவை கட்டிவிட , கோலம் போடுவதுபோல் வர்ஷா போஸ் கொடுக்க , அதை அவள் தம்பி மொபைலில் படம் பிடித்தான் .
அமுதனுக்கு ஆச்சரியம் ..... இப்படி ஒரு ஹோம்லி தேவதை படத்தைப் பார்த்து ! அவன் அம்மாவுக்கும் வர்ஷாவை மிகவும் பிடித்து விட்டது . தை பிறந்ததும் பேசி, திருமணம் முடிந்தது .
அழகான , ஆனந்த வாழ்வில் பூரித்து விட்டாள் வர்ஷா .
ஏழு வருடங்கள் உருண்டோடிய நிலையில்தான் , இன்று பாதையோரம் மாயம்மாவைக் கண்டாள் வர்ஷா . அதிர்ச்சியடைந்தவள், வேகமாகப் போய் ஹோட்டலில் உணவு வாங்கிவந்துக் கொடுத்தாள் . பார்வை மங்கிய மாயம்மாவுக்கு வர்ஷாவைத் தெரியவில்லை . மனம் பேதலித்தது போல் இருந்தாள் . மாயம்மாவைச் சாப்பிடச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தவளுக்கு , மனம் பாரமாக இருந்தது .
தாயில்லாமல் வளர்ந்த வர்ஷாவுக்கும் , நரேஷுக்கும் நல்ல தாதியாய் இருந்தவள் ..... இன்று தெருவில்... ...!! " முதல் வேலையா மாயம்மாவை நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போய் ட்ரீட்மென்ட் கொடுத்து நம்ம கூடவே வெச்சுக்கணும் . இதுதான் நான் செலுத்துற நன்றிக்கடன் !" - தனக்குள் எண்ணியவள் நிம்மதியாய் உறங்கினாள் .
(அவள் விகடன் இதழ் நடத்திய மெகா பரிசுப்போட்டி - " படம் பார்த்து கதை எழுதுங்கள் " போட்டியில் நான் எழுதிய இந்த ஒரு பக்கக் கதை ஒரு பவுன் தங்கத்தைப் பரிசாக வென்றது .
அவள் விகடன் இதழுக்கும் , நடுவராக இருந்து என் கதையை தேர்ந்தெடுத்த திரு . பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி !