திசை மாறிப் பறப்போம் - வினோதன்

குழந்தைகளின்
டோரா புச்சி
டோரிமான் உலகிற்கு
சென்று வந்ததுண்டா ?

தாத்தா பாட்டிகளோடு
கூடிக் கதைத்து
அவர்தம் இளம் வயது
கதைகளை காதிற்கு
மடை மாற்றியதுண்டா ?

கடைசியாக நீங்கள்
நிதானமாக சாப்பிட்ட
காலைச் சிற்றுண்டி
மறந்தே போகுமிதுவே
நாமும், நம் வாழ்வும் !

தனத் தேடல்தான்
தன் தேடலென
தீர்மானம் செய்தபின்
தீர்ந்தே போகிறது
திரண்ட வானம் - பின்
வானவில்லை எங்குதேட ?

வெற்றி என்பதே
வீடும் வாசலும் தான்
எனப் போதிப்போர்
மத்தியில் - மகிழ்ச்சி
பொத்தல் கனவுதான் !

சமூக தகுதிநிலைக்காக
நாம் இழந்தது என்னென்ன ?
பட்டியலிட்டுப் பாருங்கள்
கடைசியாய் மகிழ்ச்சியும்
கண்டிப்பாய் இருக்கும் !

எதை நோக்கி ஓடுகிறோம்
என்றுணராமல் ஓடுகிறோம்
எதையோ நோக்கி,
வெற்றியென்று - நமக்கு
கற்பிக்கப்பட்டதை நோக்கி !

மகிழ்ச்சியை உதறிவிட்டு
ஓடிப்பெரும் வெற்றி
தேனை கொட்டியபின்
நக்கிய புட்டியே !

"என்ன வாழ்க்கைடா"
என்று தோன்றுகையில்
"என் வாழ்க்கைடா"
என்று நம்பிக்கை விதைத்து
திசை மாறிப் பறப்போம்

எழுதியவர் : வினோதன் (6-Apr-16, 4:40 pm)
பார்வை : 138

மேலே