தமிழால் வாழ்கிறேன்
இளமை நிலைத்த தமிழ்மொழியே
இதயம் கவர்ந்த இன்மொழியே
புலமை நெஞ்சில் உருவாக்கும்
புதையல் போன்ற பொன்மொழியே
தலைமை ஏற்கும் தகுதியினை
தானாய் அடைந்த தனிமொழியே
எழுச்சி விளைக்கும் முதுமொழியே
ஏற்றம் தருகின்ற முழுமதியே
கோல மயிலும் குளிர்நிலவும்
கூட்டாய் சேர்ந்த கலைமொழியே
பழுத்த பழத்தின் சுவையதனை
பாக்களில் கொடுக்கும் பனிமொழியே
அருவியைப் பொன்று கவிதைகளை
அள்ளித் தருகின்ற அருமொழியே
கன்றின் குரலிலும் கலந்திருந்து
காற்றில் உலவும் கனிமொழியே
தூயவர் நெஞ்சில் துணையிருந்து
துணிவை வளர்க்கும் தொன்மொழியே
சிங்கத் தமிழரைப் பொங்கவைக்கும்
செங்கதிர் நிகர்த்த செம்மொழியே
சித்தத்தை இயக்கும் செழுந்தமிழே
சித்தர்கள் போற்றிய பூந்தமிழே
வித்தகர் வாழ்வில் ஒளியேற்றி
ரத்தத்தில் கலந்த நற்றமிழே
கண்கள் உறங்கிடும் வேளையிலும்
கருத்தில் நுழைவாய் உரிமையுடன்
கவிதைகள் என்னை எழுதச்சொல்லி
கைகளை இழுப்பாய் கனவினுடன்
நித்தமும் உன்னை நெஞ்சினிலே
சத்தம் இல்லாமல் சுமப்பதனால்
எத்தனையோ இடர் வந்தாலும்
இத்தரையில் நான் வாழ்கின்றேன்.
பாவலர். பாஸ்கரன்