அது ஒரு அழகிய கனாக்காலம்
கருவேலங் காட்டுக்குள்ளே வழியமைச்சு வச்சிருப்போம்
பள்ளிக்கூடம் விட்டவுடன் அங்கதானே வந்துநிப்போம்
கோலிக்குண்டு கில்லித்தண்டா அசறும்வரை ஆடிடுவோம்
பம்பரத்தில் கயித்தச்சுத்தி அபீட்டுன்னு சுழட்டிடுவோம்
அப்பனாத்தா கூப்பிட்டாலும் கேக்காதது போலநின்னு
ஓடிப்பிடிச்சு வெளையாண்டு எங்களாட்டம் தொடர்ந்திடுவோம்
தியேட்டருக்குப் போனமுன்னா தேடிப்பிடிச்சு பிலீமெடுப்போம்
தெருத்தெருவா அலைஞ்சுதானே தீப்பெட்டியட்ட சேகரிப்போம்
பள்ளிக்கூடம் விடுமுறைனா வெதவெதமா விளையாடுவோம்
கொட்டாங்குச்சி வண்டிசெஞ்சு காட்டுப்பக்கம் போய்வருவோம்
வீட்டுக்குள்ள லென்சுமாட்டி பல்புவச்சு படம்போடுவோம்
தெருமுழுதும் எல்லாருமே எப்போதுமே பேமஸுங்க...
பல்லாங்குழி பாண்டியெல்லாம் பக்குவமா ஆடிடுவோம்
ஆடுபுலி ஆட்டமாடி புலியாத்தானே திரிஞ்சுடுவோம்
குடங்குடமா தண்ணியூத்தி ஒத்துமையா குளிச்சிடுவோம்
கண்ணாம்பூச்சி ஆட்டமாடி சாக்கடையில் விழுந்திடுவோம்
இந்தக்கால கொழந்தைங்கதான் வீட்டுக்குள்ள மொடங்கிடுச்சு
கம்யூட்டரிலும் மொபைலிலுமே வெளையாட்ட ஆடிடுச்சு
கண்டதையும் கொரிச்சிக்கிட்டு டிவிமுன்னே கெடக்குதுங்க
அந்தக்கால வெளையாட்டெல்லாம் எங்கேபோயி ஒளிஞ்சுக்கிச்சோ..