விதவை விதை வை
பாவமவள்
உணர்வுகளுக்கும்
உணர்ச்சிகளுக்கும்
வெள்ளை உடையில்
சவப்பெட்டி
செய்து வைத்திருக்கிறாள்
நயவஞ்சக நாகங்களின்
நடுங்க வைக்கும்
பார்வைகளில்
கூனிக் குறுகி இருக்கிறாள்
எதிர் போகும் போது
எதிரியையும்
ஏற்கும் சமூகம்
இவளை கண்டால்
நின்று நிதானமாய்
நீர் ஊற்றி போகிறது
சகுன வாய்களுக்கு
வயது வந்தாலும் சரி
வாழ்வு வந்தாலும் சரி
வளைகாப்பென்றாலும் சரி
ஏதோ ஒரு முடுக்கிலிருந்து
எட்டிப் பாக்கவும்
விடுவதில்லை
எப்படி பட்டதோ இச்சமூகம்
வேண்டும்
ஆடை குறைத்து அலைவதற்கில்லை
விதவை மண்ணில்
விதை வைக்க
வெள்ளை ஆடை மேல்
நிறம் பூச
வேண்டும் பெண் சுதந்திரம்