பாடம் படிக்கலாம் வாங்க !
சிலந்தியே உனக்கொரு சிறு வினா
சினமின்றி உரைப்பாய் ஒரு பதில்- உயர்
நெசவுக்கு பெயர் போன எம் தமிழ் நாட்டில்
உனக்கந்த கலை தந்த நெசவன் யார்?.
தேனீயே உன் வீட்டை பார்த்தேன் நான்!
திகைத்தங்கே நின்று விட்டேன் சிலையாக-எங்கள்
தச்சர்களின் கை வண்ணம் எப்படியோ
சத்தியமாய் உன் வீடு அற்புதமே!!.
தூக்கனாங்குருவியாரே சற்று நில்லும் -அங்கே
தொங்குவது உம்முடைய அரண்மனையா ?-எம்மூர் கைவினைஞ்சர் சாகின்றார் புதிது இன்றி -ஒரு
கை கொடுமேன் உம்முடைய திறன் சொல்லி.
எலியாரே உம்மைத்தான் தேடி வந்தேன்
எப்படி நீர் சுரங்கங்கள் அமைக்கின்றீர் ?
அழியாத புகழ் கொண்ட அரசரெல்லாம்
அறிந்தாரோ இக்கலையை உம்மிடமே?.
தரை வண்டே கொஞ்ச நேரம் நிர்க்கிறீரா !
என்ன அது தலையாலே உருட்டுகின்றீர்-தொழில்
கரைகண்ட குயவரெல்லாம் இதைக்கண்டால்
தலை கவிழ்ந்து உம்முன்னே சரணடைவார்.
சிற்றெறும்பே பயணமெங்கே தொடங்கி விட்டீர் !
சின்னவனின் விண்ணப்பம் மறுக்க வேண்டாம்.
சில காலம் எம்முடனே தங்கியொரு
சேமிப்பு கிடங்கொன்று கட்டித்தாரும் .
கரையான் அண்ணாவே சௌக்கியமா ?
கரை காணா அன்பாலே இங்கு வந்தேன் -சிறு
மலை வடிவ வீடு ஓன்று எனக்கு வேணும்-நீர்
மனம் வைத்தால் நடக்கும் என்று நம்பி வந்தேன்.
சின்ன இனம் என்றிவற்றை என்ன வேண்டாம்
சித்தர்களும் இயற்கையிடம் பாடம் கற்றார்-பெரும் .
உன்னதத்தை இவர்களெல்லாம் கொண்டதனால்
வாருங்கள் களிப்புடனே பாடம் கற்போம்.
:

