மயக்கம் என்ன ?.
வான் மயங்கி வழிந்தது நீரே-அதில்
வயல் மயங்கி செழித்தது ஊரே !
காய் மயங்கி கனிந்தது பழமாய் -அதை
வாய் மயங்கி சுவைத்தது இதமாய்.
பூ மயங்கி விரித்தது இதழை -அதில்
ஈ மயங்கி சுவைத்தது தேனை.
ஆ மயங்கி அழைத்தது மகவை-அதில்
சேய் மயங்கி குடித்தது பாலை .
வெயில் மயங்கி வந்தது மாலை! -கருங்
குயில் மயங்கி இசைத்தது பாட்டு .
மயில் மயங்கி சிலிர்த்தது தோகை-அதில்
சிந்தை மயங்கி இணைந்தது ஆஹா !!.
திங்கள் மயங்கி சிரித்தது இரவில் -இளந்த்
தென்றல் மயங்கி அணைத்தது உடலை .
கண்கள் மயங்கி வந்தது உறக்கம் !-அதில்
எண்ணம் மயங்கி எழுந்தது கனவே!!.
ஞாயிறு மயங்கி தெளிந்தது காலை,-இந்த
ஞாலம் மயங்கி விழித்தது அவ்வேளை -வெண்
பனி மயங்கி ஒளிர்ந்த்தது முத்தாய் -புல்லின்
நுனி மயங்கி கிடந்தது கெத்தாய் . (கெத்து)
கடல் மயங்கி அலைந்தது அலையாய் -அதில்
கலம் மயங்கி அசைந்தது ஒயிலாய்- தாழை
மடல் மயங்கி உயிர்ந்தது மணமே-அதில்
இயற்கை மயங்கி லயித்தது ! ஆஹா! ஆஹஹா ..

