புதுக்கவிதைப் பூ

தமிழ்மரபின் ஆடைத் தரித்து அழகாய்
அமிழ்தின் இனிதாய் அரங்கில் – நிமிர்ந்தெழுந்து
ஆடும் புதுக்கவிதை அர்த்தத்தின் தேனூற்றிப்
பாடும் நவீனத்தின் பாட்டு

தெளிவற்றக் கண்ணால் திசைத்தேடி நிற்க
ஒளிவட்டம் தோன்றி உமிழும் – துளித்தேனாய்
சொட்டிச் சுவையூட்டும் சூட்சுமத்தால் நெஞ்சத்தைக்
கட்டிவைத்துக் காட்டும் கரும்பு.

நவீனத்தின் மாயைதன் நாட்டியந் தன்னை
சுவீகாரம் செய்திட்டச் சூட்டில் – பவித்திரமாய்
மேடையிட்டு ஆடுதற்கு மேல்நாட்டு வித்தகரின்
சாடையிலே வாய்த்தச் சடங்கு

சென்ரியு ஹைக்கூ சிலவாவு மப்பழ
மொன்ரி யுலிமறைக்கூ மட்டுமன்று – இன்னும்
கசலென்றும் தோன்றிக் கவிதை உலகை
அசத்தும் புதுக்கவிதைப் பூ!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Apr-16, 3:02 am)
பார்வை : 88

மேலே