உழவன் --போட்டிக் கவிதை---முஹம்மத் ஸர்பான்
வா மழையே!வா மழையே!வா மழையே!
மேகத்தின் மோகம் கண்ணீரின் ஓலம்
மண் நிலமே! தாய் நிலமே! பூ நிலமே!
இரைப்பையின் தாகம் வித்தினுள் ஓசை
***
மார்கழி வந்தால் பசுமைக்கு கொண்டாட்டம்
கோடை சுட்டதால் உழவனுக்கு புண்காயம்
கதறும் குழந்தை மழலை நெஞ்சினில்....,
சிதறும் நெல்மணி அறுவடை உயிரினில்...,
***
விழி தூங்காமல் உயிரின் சுவாசத்தை
வேருக்குள் புகுத்தி நலம் கேட்பான்.
வழி தவறிய பருவத்தின் வானிலையில்
ஊருக்குள் அணைகட்டியும் வாழ்வை மூழ்கிடுவான்.
***
உலகத்தின் இரைப்பையில் தன் வியர்வையால்
விளைந்த செல்வத்தை அள்ளிப்போட்டு ஏப்பமாக்கினான்,
கடன் கழுத்தை நெறிக்க கண்களை அடகு
வைத்து கடன் போக்க கடவுள் சந்நிதி தேடுகிறான்.
***
பாம்புகளும் விஷம் கொண்ட உயிரினங்களும்
அவன் உயிரின் ஆயுளை தீர்மானிக்கும் காலக் கணிதம்
மனமில்லாத பூக்களும் இலைகளும் உழவன்
வாழ்வின் சோகம் கண்டு உதிர்ந்து பாடுது சோகக் கீதம்
***
காலத்தை நித்தம் நித்தம் நினைத்து தலையில்
கைவைத்து குந்திருக்க மனையாள் மடலும் கிடைக்கிறது.
தோட்டத்தில் பசுக்கன்று இறந்ததாம்;புழுங்கல் அரிசியும்
தீர்ந்து விட்டதாம்;பிள்ளைக்கு பள்ளிக் கட்டணமும் வேண்டுமென்று..
***
இயற்கையை நேசித்த காதலனுக்கு கடவுளும்
செயற்கையால் மரணத்தை எழுதி விட்டான்.
மழலையில் கயிர் போட்டு ஊஞ்சலாடிய ஆலமரம்
இன்று கழுத்தை நெறித்து சவக்குழி ஆகிறது.
***
விதி எழுதி மனிதனை படிக்கும் கடவுள்
சதி நிறைந்த மாபெரும் எழுத்தாளன்.
வறுமையை மீண்டும் மீண்டும் கொடுப்பான்.
அந்த ஏக்கத்தின் கல்லறையில் தீ வைத்து ரசிப்பான்.
***
குடிசை வீட்டு ஏழை உழவன் போட்ட
விதை நெல் அவனின் பசிக்கு விருந்தின்றி
வாய்க்கரிசாகத்தான் மாற்றமடைகிறது இறைவனே!
என் கவியின் கேள்விக்கு உன் பதிலென்ன...?
***
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
