சுற்றுச்சூழல்

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் நம் நாடு விவசாயம் செழிச்ச பூமியா இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமையாகவும், இயற்கை கொஞ்சும் அழகோடும் நிலமகள் நின்றிருந்தாள். ஒவ்வொரு சாலை வழிகளிலும் மரங்கள் உயர்ந்தும் நிழல்கள் தந்தும் காணப்பட்டன. இதனால் சுத்தமான காற்றையும் சுவாசித்தோம்; தூய சுற்றுபுறத்தோடும் வாழ்ந்தோம். இன்று வீடுகள் கட்டுவதற்கும், தொழிற்சாலைகள் கட்டுவதற்கும் காடுகளை அழித்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு தேவையான மரச்சாமான்களுக்காகவும், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் சாலைகளை விரிவுப்படுத்த என்று மரங்களையும் அழித்து கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசுபட காரணங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் கீழே காண்போம்.

நம் தாத்தா பாட்டிகள் எல்லாம் காய்கறிகள், அரிசி, பருப்பு என்று அனைத்து சமையல் பொருள்கள் வாங்க மஞ்சள் துணி பைகளையே உபயோகித்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் மஞ்சள் பை என்றால் படிக்காதவர்கள் மற்றும் வசதி இல்லாதவர்கள் உபயோகபடுத்துவது என்று முத்திரை குத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பூமியில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை தின்று செரிமானம் செய்ய முடியாமல் பல கால்நடைகள் அழிந்து வருகின்றன. நாம் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பல ஆண்டுகள் ஏறக்குறைய 300 ஆண்டுகள் வரை மண்ணில் மக்காத தன்மைகொண்டதால் மழைநீர் பூமிக்குள் சேராமல் கடல்களில், மற்ற இடங்களில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீரின் அளவு குறைந்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் சிரமப்படவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வள்ளுவர் பெருந்தகை இதனையே "நீர் இன்றி அமையாது உலகு" என்றார்கள்.

மற்றவர்களால் அடிமைகள் போல நடத்த பட்டதாலோ என்னவோ அனைவரும் வசதி படைத்தவர்களாக ஆசைப்பட்டு இன்று சுயதொழில் என்ற பெயரில் நிறைய தொழிற்சாலைகளை கட்டுகிறோம். அது வெளியேற்றும் கழிவுகள் மற்றும் இறைச்சல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. உடல் நோகாமல் போக இருசக்கர மோட்டார் சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறோம். அது வெளியிடும் புகை மற்றும் நாம் குடிக்கும் சிகரெட், பீடி, கஞ்சாவிலிருந்து வெளிவரும் புகை, காடுகளை எரிக்கும்போது வெளிவரும் புகை முதலியவை காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்துவதால் அந்த காற்றை சுவாசிக்கும் நமக்கு மூச்சுத்திணறல், கேன்சர் மற்றும் சுவாச உறுப்புகளில் கோளாறுகள் போன்ற வியாதிகள் எல்லாம் வேண்டா விருந்தாளியாக வருகை புரிகின்றன. அன்றாட குப்பைகளை குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொடுக்கப்பட்ட குப்பைதொட்டியில் போடாமல் கண்ட கண்ட இடத்தில் கொட்டுவதால் சுற்றுப்புறம் அசுத்தமாகவும், அருவருக்கத்தக்கதாகவும் மாறி காற்றை மாசுபடுத்தி வருகிறது.

இயற்கை நமக்கு கிடைத்த வரம்; அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்றவை. இயற்கை உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு தேவையான மூலபொருட்களை காடுகளின் மூலமாகவும், மரங்களின் மூலமாகவும் நமக்கு தருகிறது. நம் முன்னோர்கள் வீடுகள் கட்டும்போது வீட்டை சுற்றியும் மரங்களை நட்டு வளர்த்தார்கள். கழிவு நீரை மரங்கள் உறிஞ்சு கொண்டதால் நீர் மாசு அடையாமல் சுத்தமான நீரையே குடிநீராக அருந்தினார்கள். அதை புரிந்து கொள்ளாமல் நாம் இன்று காடுகளையும், மரங்களையும் அழிப்பதால் தான் மழையில்லாமல் குடிப்பதற்கே நீரின்றி தவிக்கிறோம்.

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது சாதி, மத, இன, மொழி, நாடு வேறுபாடுகளற்று மனிதகுலம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவற்றை தவறவிடும் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின் ஆயுளை குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணரவேண்டும். அன்றாடம் நிகழ்த்தும் சிறு சிறு செயல்களின் மூலம் நமது சுற்றுப்புறத்தைக் காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு.

பொதுவிடங்களில் குப்பைகளை போடுதல், பொதுவிடங்களில் தேவையற்றவற்றை எரித்து காற்றை மாசுப்படுத்துதல், தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்க விடுதல், கழிவு நீர் தேங்குமிடங்களில் அடைப்புகள் ஏற்படுத்துதல், போன்றவற்றை தவிர்த்து சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்போம்!வளமான வாழ்வு வாழ்வோம்!!

எழுதியவர் : புவனாபாலா (29-Apr-16, 2:28 pm)
Tanglish : sutruchchoozhal
பார்வை : 4752

மேலே