உழைப்பாளி - எழுத்து போட்டி படைப்பு

வியர்வைச் சிறகுகள் உதிர்த்தபடி
உழைப்பை உதிரமாய் வடித்தபடி
காலத்தின் பாதையில் சென்றபடி
உழன்றோம் உழன்றோம் விடியலில்லை.

உழைப்பே தெய்வம் என்றபடி
மனதினில் நம்பிக்கை கொண்டபடி
வாழ்க்கையோ டதனை இணைத்தபடி
வாழ்வோம் வாழ்வோம் சோம்பலில்லை

சுதந்தரக் காற்றை நுகர்ந்தபடி
சொல்லும் செயலும் இணைந்தபடி
உழைப்புடன் உறுதியை சுமந்தபடி
எழுவோம் எழுவோம் தடையில்லை.

விண்ணின் கூரையைப் பிளக்கும்படி
மேவும் புரட்சியை தொடுத்தபடி
எதிர்வரும் தடைகளை மாய்த்தபடி
படைப்போம் படைப்போம் விடியல்களை

பாலையும் பசுமையாய் ஆகும்படி
”பசுமைப்புரட்சி”யை நினைத்தபடி
உலகில் வயல்கள் பெருகும்படி
உழைப்போம் உழைப்போம் முதுமையில்லை

தவழ்ந்திடும் அலைகடல் வியக்கும்படி
அதில் வாழும் மீனினம் பெருகும்படி
”நீலப்பரட்சி”யும் உயரும்படி
நினைப்போம் நினைப்போம் தளர்வு இல்லை

கன்றும் குழந்தையும் பசி ஆறும்படி
பால்தரும் பசுவும் மகிழும்படி
”வெண்மைபுரட்சி”யும் உயரும்படி
வகுப்போம் வகுப்போம் ஓய்வு இல்லை.

பற்பல தொழில்கள் செய்தபடி
ஓடாய் செருப்பாய் தேய்ந்தபடி
குடும்பத்தை வறுமையில் காத்தபடி
உழைப்பவர் உழைப்பவர் தெய்வம்தான்

உழைப்புக்கு ஊதியம் உயரும்படி
உழைப்பவர் வாழ்க்கை ஓங்கும்படி
காலங்கள் வருமே மகிழும்படி
நம்பிக்கை நம்பிக்கை கொண்டிடுவோம்

நம் கலாச்சாரங்கள் காத்தபடி
உலக நாடுகள் வியக்கும்படி
அறிவியல் நுட்பத்தில் உயர்ந்தபடி
உழைப்போம் உழைப்போம் உயர்வுண்டு

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (2-May-16, 9:11 am)
பார்வை : 3883

மேலே