சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் ஒரு பார்வை

சுழலன்று வரும் இந்த வேகமான உலகில் நாம் மறந்து விட்ட ஒரு வார்த்தை. வளர்ந்த பொருளாதாரம், கற்பனைக்கு மீறிய கண்டுப்பிடிப்புகள், வேகமான வாழ்க்கை, விவேகமான அறிவியல் என பல இன்னல்களில் சிக்கி சின்னா பின்னாமாகி கொண்டிருக்கிற ஒரு பொருள். மானுடம் வாழ இறைவன் கொடுத்த பரிசு. அது தான் சுற்றுச்சூழல் எனப்படுகின்ற இயற்கை. மண், மலை, மரம், நீர், நிலம், காற்று, காடு, கடல், நதி என எல்லாமே இந்த இயற்கையின் செல்லப் பிள்ளைகள். மனிதனும் இயற்கையும் ஒன்றாக இருந்தார்கள் ஒரு காலத்தில், பணம் என்று இவர்கள் நடுவில் வந்ததோ அன்று அழிக்கத்தொடங்கினான் இல்லை அழிய தொடங்கினான் இந்த மனிதன். ஓசோன் படலத்தில் ஓட்டை, பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், பசுமை குடில் விளைவு,மாசு, தூசு இவையெல்லாம் அனுதினமும் நாம் செய்திதாள்களில் பார்த்து மற்றும் படித்து வரும் செய்திகள் தான்.

தண்ணீர்… தண்ணீர்……

’நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவன் சொல்ல காரணம் புரிந்துக் கொண்டேன், நீர் உணவு உற்பத்தி செய்ய பயன்படுகிறது அதாவது விவசாயம் செய்ய, உணவு செய்வதற்கு பயன்படுகிறது அதாவது சமையல் செய்ய, சில சமயங்களில் உணவாகவும் பயன்படுகிறது. ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் காலை முதல் மாலை வரை வாழ முடியுமா என்று கூட நம்மால் நினைத்து பார்க்க முடியாது. காணாமல் போன கன்மாய்கள் எல்லாம் இன்று கட்டிடங்களாய் ஓங்கி உயர்ந்து நம் கண் முன்னே நிற்கிறது. நம் வாழ்க்கை பயணத்தில் நமக்கு தெரியாமல் நாம் பல லிட்டர் தண்ணீரை வீணடித்து வருகிறோம் இது ஒரு புறம் மறுபுறமோ இதைவிட கொடுமை. அதற்கு அருமையான எடுத்துக்காட்டு மஹாராஷ்ட்ராவில் உள்ள மாரட்வாடா எனும் பகுதிக்கு தினமும் இரயிலில் பல்லாயிரகணக்கான லிட்டர் தண்ணிர் விவசாயத்திற்காக எடுத்து செல்லப்படுவதுதான். மூன்றாம் உலகப் போர் தண்ணிருக்காக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. என் தாத்தா ஊற்று தண்ணீரை பார்த்தார், என் அப்பா ஆற்று தண்ணீரை பார்த்தார், நான் குழாய் தண்ணீரை பார்க்கிறேன் என் பேரன் பாட்டில் தண்ணீரை பார்ப்பானா? என்பது கூட சந்தேகம் தான். இனிவரும் காலங்களில் டீக்கடை விளம்பர பலகைகளில் ‘ஒரு லிட்டர் தண்ணீர் 1000 ரூபாய்.. ஒரு சொட்டு தண்ணீர் இலவசம்‘ என்று இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.

நிலம் அது எங்கள் வளம்..

இந்தியாவின் பல கிராம பகுதிகளில் நிலமே மக்களுக்கு கழிப்பிடமாக பயன்பட்டுவருகிறது. இவ்வாறு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க தவறியது அரசின் குற்றமா? இல்லை இது அடிப்படை தேவை என்பதே தெரியாமல் இருக்கும் மக்களின் குற்றமா? 2014 ஐ.நா வின் அறிக்கையின்படி அதிகம் மின்னனு கழிவுகள் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. கழிவு உற்பத்தி ஒருபுறம் இருக்க கழிவு மேலாண்மை எங்கே என்பது அடுத்த கேள்வி. இதுமட்டுமல்லாமல் ஆடம்பரத்துக்கும் அவசியத்துக்கும் இடையில் சிக்கி தவிக்கும் நெகிழி என்றழைக்கப்படும் பிளாஸ்டிக், அழிந்தும் அழியாமலும் நிலத்தை சீரழித்து வரும் ஓர் எதிரி. பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் பலருக்கு புற்றுநோய் இருப்பது புற்றுநோய் ஆய்வகத்தின் புள்ளிவிவரம், இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் பசுமைப் புரட்சி என்ற பெயரில் நாம் அதிகளவில் பயன்படுத்திய செயற்கை உரங்கள் தான். இனிவரும் காலங்களில் விவசாயத்திற்கு அனுப்பப்படும் தண்ணீரில் இந்த செயற்கை உரங்கள் கலந்து அனுப்பப்படும் என்று காற்று வழியாக பல தகவல்கள் வருகிறது.

காற்று அதற்கில்லை மாற்று…..

21 சதவீதம் ஆக்ஸிஜன் காற்றில் இருந்தாலும் அதில் சுத்தமான ஆக்ஸிஜன் என்பது மிகவும் குறைவு தான். வாகனங்கள், தொழிற்சாலைகள் என புகையை இந்த உலகிற்கு இலவசமாக தரும் முகவங்கள் ஆயிரம் ஆயிரம். குளிரூட்டிகளின் விளைவு வீட்டிற்குள் ஊட்டி வெளியே சஹாரா. காட்டு மரங்கள் காணாமல் போய் கான்கிரீட் மரங்கள் வளர்ந்து நிற்கிறன. மரம் வளர்க்க இடமில்லாமல் மாடிகளில் செடி வளர்த்து சாதனை படைத்து வரும் சாதனையாளர்கள். புகைப்பிடிப்பது என்பது அன்றாட பழக்கங்களில் ஒன்றாகி போனது.

மாற்றம் என்னிலிருந்து தொடங்கட்டும்…!


சுற்றுச்சுழலைக் காப்போம், மரம் வளர்ப்போம் என்று சொல்லுவதாலோ அல்லது முழக்கமிடுவதலோ எந்த ஒரு மாற்றமோ ஏற்படப்போவதில்லை. மாற்றம் என்பது நம்மிலிருந்து தொடங்க வேண்டும். நான் – இல் தொடங்கி நாம் - இல் முடிய வேண்டும். சுற்றுச்சுழல் என்பது நமக்கு மட்டும் கொடுக்கப்பட்ட வரமில்லை, நம்மைப் போன்று பல உயிரினங்கள் வாழ்ந்துவரும் பூமி இது. அதனால் தான் அன்றே பாரதி ‘காக்கை குருவி எங்கள் சாதியென்று’ பாடினான். சுயநலம் இருக்க வேண்டும் எதில்? இந்த பூவியை நான் காப்பற்றுவேன் என்பதில். வளங்கள் பல கொட்டிக்கிடக்கின்றன அளவாக அனுபவிக்க வேண்டும், வரும் காலத்தினர் பயன்படுத்துவதற்கு. இயற்கை இல்லாத உலகை மனிதன் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. போனது போகட்டும் இனி யார் செயல்பட போவது. இளைஞர்களா? முதியோர்களா? இன்றைய இளைஞர்களின் சிந்தனையெல்லாம் 5 4 3 2 1 0 தான். அது என்ன?

5 இலக்கில் நல்ல சம்பளம்
4 சக்கர வாகனம்
3 அறைகள் கொண்ட வீடு
2 குழந்தைகள்
1 மனைவி

வாட்ஸ் அப்பில் வாழ்வதை குறைத்து விட்டு வானத்தை பார்த்து ரசிக்க வேண்டும். குறுந்தகவல்களை பகிர்வதை குறைத்து குருவிகளின் சத்தத்தை கேட்டு ரசிக்க வேண்டும். இளைஞர்களின் அறிவும் முதியவர்ளின் அனுபவமும் சேர்ந்து இந்த சூழலை காக்க வேண்டும். வாழ வேண்டும் இயற்கையுடன் இணைந்து. இவ்வரிகள் இக்கட்டுரையின் முடிவாக இருக்கலாம். ஆனால், இது சுற்றுச்சுழல் விழிப்புணர்வின் ஒரு தொடக்கம்.

எழுதியவர் : சங்கர்.க (2-May-16, 11:56 am)
Tanglish : sutruchchoozhal
பார்வை : 6274

சிறந்த கட்டுரைகள்

மேலே