குழந்தை தொழிலாளர்

காதலிக்க தெரியாத
யாரோ இருவரின்...
இச்சைகளிட்ட மிச்சத்தின் எச்சமாய்...
மீண்டும் பிறந்தான்
ஒரு குழந்தை
தொழிலாளியாக...!

குப்பைத்தொட்டியில்....
அழுகுரலோடு
குழந்தை
குதறியெடுக்க குறிபார்க்கும்
நாய்...
காசாக்க துடிக்கும்
பணவெறி பிடித்த
பேய்...!

கழுகுகளின் பார்வையில்
தப்பி ..
காப்பகத்தில் சேர்ந்தது...!
என்றோ ஒரு நாள்..
காலத்தின் கட்டாயத்தில்
காப்பகமும் கதவடைக்கப்பட்டது..!

முகவரி இன்றி தவித்தவனை
அழுக்குச் சட்டையும்...
பரட்டைத் தலையும்...
ஒட்டிய வயிறும் ...
அடையாளப்படுத்திக்கொண்டன...!

சிக்னல் தோறும்
சிகப்பு விளக்கிற்கு
ஏங்கி நிற்பான்...
சில்லரைகள் அவன்
வயிற்றை நிரப்பும்...
சிலரின் ஏளனப்பேச்சுகள்
அவன் மனதை வதைக்கும்..!

சித்திரை வெயிலில்
சுக்கிரனின் உக்கிரத்தால்
சுருண்டு விழுந்தான்..
சிலர் சாடினர்
பலர் கூடினர்...

யாரோ ஒருவரின்
நேயத்தில் விழித்தெழுந்தான்...
மூன்று வேளை சாப்பாடு தாரேன்...
வீட்டு வேலைக்கு வாயென அழைக்க
தலையாட்டி பொம்மையானான்...!

சீக்கிரமே அவன் எழணும்
வீடு வாசல் கூட்டணும்...
காய்கறிகளும் வாங்கணும்...
டேபிளும் துடைக்கணும்...
பள்ளிக்கூடம் போகும் பையனுக்கு
பையும் சுமக்கணும்...
அவங்க வீட்டு நாயையும்
குளிக்கவைக்கணும்...!

தப்பா ஏதோ
அவன் செய்ய
அப்பன் பேரு தெரியாத சனியன்
என் உசிர வாங்குதுன்னு
சூடு போட்டா எஜமானியம்மா...!

கடவுளிடம் கோபத்துடன்
கையை தடவிக்கொண்டான்...
ஏச்சிலும் பேச்சிலும்
மறத்துபோன
பிஞ்சு உள்ளம்...
அன்று ஏனோ
புதிதாய் வலித்தது...!

ஏனோ நினைவு வந்தவனாய்
சட்டென எழுந்து...
வாசல் கடக்கிறான்
நம்பிக்கையற்ற பொழுதுகளை
இருளில் தொலைத்து நடக்கத்தொடங்கினான்...!

-கீதா பரமன்

எழுதியவர் : Geetha paraman (10-May-16, 4:51 pm)
பார்வை : 185

மேலே