12 பிவி பாகம்- 9

ரவி சார் போலீஸ் வேனில் உட்கார்ந்தபடியே பிவியிடம் நடந்ததை சொல்லிக் கொண்டே வந்தார்.
........தங்களது வேனை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த பிவி இருந்த ஜீப்பு ஒரு வளைவில் திடீரென காணாமல் போனது. வேன் டிரைவரோ நிற்காமல் பஸ் நிலையம் சென்றுவிட.... மற்றவர்கள் இறங்கிக் கொண்டு வேன் கிளம்பி போயிற்று. வந்திறங்கி அரை மணி நேரமாகியும் ஜீப்பு வராததைக் கண்டு ரவிசாரும் சுமித்ரா மிஸ்ஸும் கவலை அடைந்து அருகே இருந்த கடைகளில் டான்ஸ் ட்ரூப் வீட்டுக்கு போக வழி கேட்டனர்.

இத்தனைக்குள் ஒரு ஆள் பிவி என்று பெயர் இருந்த அவள் குச்சியை கொண்டுவந்து கொடுத்து ஒரு பெண் ஜீப்பிலிருந்து இறங்கி அருகே இருந்த ஏரிக்கு சென்றதாகவும் தண்ணீரில் விளையாடியபடியே மூழ்கிவிட்டதாகவும். அந்த குச்சி மட்டும் மிதந்தது என்று கூறியதாகவும் எல்லோரும் அங்கே ஓடி போய் பார்த்ததில்... அவள் போட்டிருந்த ஸ்வட்டர் போன்றே ஒரு துணி நீரில் மிதப்பதைப் பார்த்து... அதை உண்மை என்று நம்பி.... போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் இரவே செயல்பட்டு ... தேடியதில்... ஒன்றும் கிடைக்கவில்லை. பொழுது புலரும்வரை ஏரியில் தேடியதில் ஒரு துப்பும் கிடைக்காமல் என்ன செய்வதென்று மேலதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கையில் பிவி வந்து சேர்ந்தாள் எனவும் கூறினார். ஜிப்பா அங்கிளையும் வேன் டிரைவரையும் குச்சி கொண்டுவந்த ஆளையும் சந்தேகிக்காதது தனது தவறு என்றும் வருத்தப் பட்டுக் கொண்டார் ரவி சார்.

பிவி எப்படி தன்னை வீட்டிலேயே பூட்டினார் என்றும்... டான்ஸ் ட்ரூப் ஆட்களிடமிருந்து எப்படி தப்பித்தாள் என்றும் சொல்லிக் கொண்டே வந்தாள் பிவி. வழிதோறும் சுடுகாடு அதில் எரிந்த சடலம் என்று காட்டியவாறே பிவி டான்ஸ் ட்ரூப் வீட்டுக்கு வழி சொன்னாள். அவள் சொல்வதை எல்லாம் ஹிந்தியில் மொழிபெயர்த்து போலீசாரிடம் சொல்லிக் கொண்டே வந்தார் ரவி சார்.

அவர்கள் அந்த ஒதுக்கபுறமான வீட்டுக்கு போகும்போது அனைவரும் இன்னமும் உறங்கிக் கொண்டு இருந்தனர். அந்த மீசை ஆளும் சில தடியர்களும் மட்டும் வீட்டின் பின்புறத்தில் இருந்தனர். அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.

மேக்னா மீட்கப் பட்டாள். ஆனால் அவளோ பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள். முகத்தில் ஒரு சலனமும் இல்லாது உதட்டில் ஒரு ஓரப் புன்னகையுடனேயே இருந்தாள். மேக்னாவின் தந்தையையோ தாத்தாவையோ அவள் அடையாளம் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. பல பேர் கைது செய்யப் பட்டனர். ஜிப்பா அங்கிளை தேட போலீஸ் படை போனது.

போலீஸ் ஸ்டேஷன் சென்று பழைய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டு நடந்தவைகளை ஒரு வாக்குமூலமாக எழுதிக் கொடுத்தனர். சில வழக்கமான சட்ட ஆவணங்களை பூர்த்தி செய்துவிட்டு எல்லோரும் டில்லிக்கு பஸ் ஏறினர்.

முதல் நாள் ஆறு மணிமுதல் அடுத்த நாள் ஆறு மணி வரை பன்னிரண்டு மணி நேரம் தனித்து தவித்து துணிச்சலோடு போராடி பன்னிரண்டே வயதான பிவி தன் முயற்சியால் ஒரு சாகச விளையாட்டை விளையாடி விட்டாள். தொலைந்து போன பெண்ணையும் கண்டுபிடித்து விட்டாள்.

டில்லியில் ரயில் ஏறியது முதல் இறங்கும்வரை ரயில் பயணம் முழுதம் பிவி தன் அனுபவங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொண்டே வந்தாள். அவளை சுற்றி உட்கார்ந்து எல்லோரும் கதையாய் காட்சியாய் ம்ம்.. ஓ... அப்புறம்... ஐயோ ... என்றெல்லாம் கூறி அவளை தொடரச் செய்தனர்.

பிள்ளைகள் அமைதியாய் விபரங்களை கேட்டுக் கொண்டிருந்தனர்... பிவியின் குரலையும் ரயிலின் சத்தத்தையும் தாண்டி ரவி சார் மனதில் ஆயிரம் கேள்விகள் முட்டின. அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இதோடு இந்த நிகழ்வு முடிந்ததாய் அவருக்கு தோன்றவில்லை. இத்தனைக்கும் பின்னணி என்னவாக இருக்கும், இந்த ஆட்கடத்தலின் காரணம் என்னவாக இருக்கும் என்று ரவி சார் குழம்பிக் கொண்டே வந்தார். ஜிப்பாகாரனை போலீஸ் கைதுசெய்யும் வரை ஆபத்து நீங்கியதாக எப்படி நம்புவது?....

தொடரும்...

Pic courtesy: 123rf

எழுதியவர் : சுபா சுந்தர் (11-May-16, 1:36 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 123

மேலே