தமிழ் காதல்
எட்டி எட்டி
ஏழடிவைப்பதற்குள்
எட்டுமுறை விழுந்தாலும்
முனைப்பு கொண்டு
எத்தனை எத்தனை முறை
எழுந்து நடக்க
முயற்சிக்கிறாய் என் செல்லமே.!
நீ குழறிப் பேசும்
மழலையின் அழகில்
தாய்மொழியும் இனிதாகிறது
மொழியின்றி உனைப்பார்க்கும்
தந்தையின் சொற்களோ
கவிதையில் மூழ்கிப் போகிறது..
நடைவண்டியை
நாசுக்காய் தள்ளிவிட்டு
நடக்கும் உனக்குள்
எத்தனை காயங்கள்...!
கலங்கிப் போகாதே...
வாழ்க்கையில்
எழுந்து நடக்கும்
ஆரம்பப் போராட்டத்தில்
முழங்காலிலும்
முகத்திலும்
முன் உடலிலும்
நீ வாங்கும் புண்கள்
வெற்றியின் வீரத் தழும்புகள்...
சிறு பிராயத்து
வாழ்க்கைப் போரிலும் கூட
விழுப்புண்களை மட்டுமே
நீ வாங்கி
வீரத்தமிழனென்தை
உலகுக்கு சொல்கிறாய்......
கீழே விழும்போதெல்லாம்
நிலத்தை நான் அடிக்க அடிக்க
உனக்குள் உயர்கிறது
சிரிப்போசை.
எனக்குள்
ஆயிரம் சிலிர்ப்புகள்
.
உன் செம்பவள
வாய்திறந்து சிரிக்கையில்
சிவந்து நிற்கும்
வேலியோர கோவைப் பழமும்
வெடித்து விடுகிறது..
என் குடிசை தேடி
கிளிக்கூட்டமும்
பறந்தோடி வருகிறது...
விருந்தென்று வந்தவற்றை
வெறுங்கையோடு
அனுப்ப மனமில்லை.
ஏழ்மையை அடகுவைத்து
எதை நான் வாங்க..?
கொஞ்சம் நீ கண்ணுறங்கு
உன்னோடு
கொஞ்சும் அவற்றுக்கு
மிளகாய் பழத்தையும்
கொஞ்சமிருக்கும்
வயல் நெல்லையும்
உடைத்து வைக்கிறேன்.
உனக்குத் தர
ஒன்றுமில்லை
பசித்தாலும்
பரவாயில்லை.
சோர்ந்து போகாதே
விருந்தோம்பலுக்கு
முன்னுதாரணம் நீயாகி
அவைகளோடு விளையாடு.
நீ வேண்டும்வரை விளையாடு.!

