சாளக்கிராமம்
சாளக்கிராமம்" என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும்.
இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது.
திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ரகிரீடம்" என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார்.
அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர்.
இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.
சிறப்பு :
சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை
சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.
சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு.
சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.
சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் "ஸ்வயம் வியக்தம்" என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது.
இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள்.
சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது.
யாரும் தொட்டு வழிபடலாம்.
சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.
ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது "லட்சுமி நாராயண சாளக்கிராமம்".
நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது "லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்",
இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது "ரகுநாத சாளக்கிராமம்".
இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது "வாமன சாளக்கிராமம்".
வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது "ஸ்ரீதர சாளக்கிராமம்".
விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது "தாமோதர சாளக்கிராமம்".
மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது "ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்".
விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது "ரணராக சாளக்கிராமம்".
பதினான்கு சக்கரங்களும் கொண்டது "ஆதிசேட சாளக்கிராமம்".
சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது "மதுசூதன சாளக்கிராமம்".
ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது "சுதர்சன சாளக்கிராமம்".
மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது "கதாதர சாளக்கிராமம்".
இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது "ஹயக்ரீவ சாளக்கிராமம்".
இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது "லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்".
துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது
"வாசுதேவ சாளக்கிராமம்".
சூட்சுமமான சக்கரமும்
ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன "சாளக்கிராமம்".
விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது "அநிருத்த சாளக்கிராமம்".
இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள்.
சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.
இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும்.
சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.
சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் .
சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.
12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர்.
12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர்.
சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும்.
சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன.
வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்,
பச்சை - பலம், வலிமையைத் தரும்,
கருப்பு - புகழ், பெருமை சேரும்,
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.
சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும்.
இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் மாலவனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும்.
இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவபெருமானை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.
இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் கண்டகி நதியில் காணப்படுகின்றன.
இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.
இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
சாளக்கிராம வகைகள் :
பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.
இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.
பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து ’சாளக்கிராம சாட்சியாக’ சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது.
புராணக் குறிப்புகள்
கருட புராணம் மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
விஷ்ணு புராணம் :
கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
பத்ம புராணம் :
சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது.
ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி :
சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று "ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி" எனும் நூல் கூறுகின்றது,
"ஸ்ரீதேவி பாகவதமும்" "ஸ்ரீநரசிம்ம புராணமும்" :
"ஸ்ரீதேவி பாகவதமும்" "ஸ்ரீநரசிம்ம புராணமும்" சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன.
துவாரகா சிலா :
சாளக்கிராமத்தை துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பானது என்று கூறுவர்.