கடந்து வந்த வழியில்

கொக்கிரகுளத்தில் புறப்பட்டு
இரு சக்கர வாகனத்தில் வீடு வந்தடைய
இவ்வளவு நேரமா என்று
கோபித்துக் கொண்டாள் மனைவி
ஆரைக்குளம் ரெயில்வே கேட்டில்
திருச்செந்தூர் ரெயிலில் கையசைத்தபடி சென்ற
ஜன்னலோர சிறுமிக்கு பதில் சைகை காட்டி
வழியனுப்பி வைத்தேன் என்று சொல்லி இருக்கலாம்
திடியூர் ஆற்றுப் பாலம் அருகில்
சாலையோரம் கொத்துக் கொத்தாய் நிற்கும்
பனை மரங்களை கடக்கையில்
பூமி சுழலுவதை உணர்ந்தேன் என்று
சொல்லி இருக்கலாம்
பிரான்ஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் அருகில்
சிவப்பின் குழந்தைகளாய்
பல்லாயிரம் இளஞ் சிவப்பு நிற தாமரைகள்
பூத்து நிற்கும் குளத்தை
சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லி இருக்கலாம்
நெல் வயல்களில் கேள்விக்குறி கழுத்துடன்
இரைக்கு காத்திருந்த கொக்குகளை
ஒன்று விடாமல் பார்த்தேன் என்று சொல்லி இருக்கலாம்
இலை தெரியாமல் பூத்து நின்ற
தங்கரளி மரங்களை
பார்த்துக் கொண்டே வந்தேன் என்று
சொல்லியிருக்கலாம்
கோபாலசமுத்திரம் விலக்கில்
மூதாட்டி ஒருத்திக்கு புல்லுக் கட்டு தூக்கி விட்டேன்
என்றாவது சொல்லி இருக்கலாம்
சொன்னால் உங்களுக்கு கோட்டி தான் புடிச்சுருக்கு என்று
சொல்வாளோ என்றெண்ணி
ஒன்றும் சொல்ல வில்லை

எழுதியவர் : அன்பழகன் செந்தில்வேல் (25-May-16, 11:38 am)
பார்வை : 64

மேலே