புலவரெல்லோரும் ஓர் குலமே

புறவயமாகட்டும்
அகவயமாகட்டும்
புலவரெல்லோரும்
ஓர் குலமே என்றேன்.

பாலும் கற்ற நூலும்
நாலும் நமக்குள்.
பேதமே என்றாள்

இரு இரு கொஞ்சம்
இதனைக் கேளு
”எரிமருள் வேங்கை
இருந்த தோகை
இழையணி மடந்தையின்
தோன்றும் நாட”

கபிலர் பாடிய
ஐங்குறு நூறில்
வேங்கை அதற்கு
தீப் பிடித்ததும்
வில்லியம் பிளேக்கின்
புலிப் பாடலில்
எரியும் புலியே
என்பதும் சரியே
குணதிசைக் கவிஞனும்
மேற்திசைப் புலவனும்
அடர்வனம் அதிலே
அப்படிப் பார்த்தனர்
எத்திசைப் புலவனும்
ஒத்திசைவாகப்
பாடுவதென்றால்
அவர் ஒரு குலமே
என்று நிறுத்தினேன்.

கபிலரின் காடும்
பிளேக்கின் வனமும்
முல்லைத் திணையெனில்
தொல்லை யில்லை.
பாலைத் திணையின்
விலங்கினம் அதனை
முல்லையில் சொல்வது
செவ்வியல் மரபோ?
படித்ததை சொல்லிட
பாவி உமக்கு
கிடைத்தவள் நானோ
கடையைக் கட்டும்
என்றவள் கூறி
சடையினைத் தூக்கி
பின்னாள் விட்டாள்
சாட்டையில் அடிப்பதாய்.

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (25-May-16, 1:22 pm)
பார்வை : 62

புதிய படைப்புகள்

மேலே