மீண்டும் கதவு தட்டப் படுகிறது

ஓர்
ஓவியத்தைப் போலதான்
இருக்கிறாய்...
வண்ணம் வழிந்து
நெளிந்து ஒரு வானவில்லின்
தேசத்தை கனவாக்கிட
உன்னால் முடிகிறது....
என் இலையுதிர் காலத்தின்
நுனி பிடித்து
ஊஞ்சல் ஆடும் உன்
கொலுசொலியின் நிறம்
இன்னமும் எனக்கு புதிர்....
புது புது பெயர்களாலும்
புனைவுகளாலும்
நான் உன்னை சேமித்துக்
கொண்டேயிருக்கிறேன்...
வெளி முழுக்க சுவராக்கி
நினைவுப் படிமங்களில்
உன்னை வார்க்கின்ற
பொழுதெல்லாம்
என் கதவு தட்டப் படுகிறது.
விழித்துக் கொள்கிறேன்...
மறுபடியும் வெட்கத்தோடு
முகம் திருப்பிக்
கொண்டிருக்கும் உன்னை
ஓர் ஓவியமாகவே பார்க்கிறேன்....
சுவர் தாண்டி அசையும்
கேசத்தின் சுவடுகளை
நுகர்ந்தபடியே
கடக்காமல் கிடக்கிறது
உனதிரவின் நிழல் புனைவு....

மீண்டும் கதவு தட்டப் படுகிறது...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (26-May-16, 3:10 pm)
பார்வை : 345

மேலே