வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி

வெயிலோடு விளையாடி.. வெயிலோடு உறவாடி..
=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-==-=-=-=-=-===-=-=-=-=-=

இறுதி ஆண்டில் தேர்வெழுதி
வழியனுப்பி வரும் வேளை
கொண்டாடி மகிழ்வதற்கு
கூட்டாளி வெயில்தானே..!!

ஏராள விடுமுறையில்
சித்திரையோ கத்திரியோ
எது வந்தும் கவலை இல்லை
விளையாடிக் களிப்போமே..!!

வெயில் நித்தம் சிரம் வாங்கி
வெப்பத்தில் முகம் கருக்க
நீரின்றி நீராடி
வியர்வையிலே குளிப்போமே..!!

வெயில் என்ன செய்துவிடும்
நீராகாரம் காலையிலே
கேப்பைக்கூழ் தயிர் கலந்து
அத்தனையும் குடிப்போமே..!

ஊருக்கு எல்லையிலே
ஓடுமந்த ஆற்றினிலே
குதித்திருக்கும் வெயிலோடு
குதித்து கொட்டம் அடிப்போமே..!

தள்ளுவண்டிக் காரனிடம்
நாவில் எச்சி ஊற வைக்கும்
குச்சி ஐஸ் வாங்கித் தின்று
வெயிலுக்கு விடை கொடுப்போமே.!

குற்றாலம் சென்றுமந்த
அருவியோடு ஆர்ப்பரிப்போம்
கொடைக்கானல் சென்றுமந்த
குளிர்மேகம் தொடுவோமே..!

நுங்கு தின்று வெப்பம் தணித்து
பனங்காயின் சக்கரத்தில்
விளையாட வண்டி செய்து
குச்சி கொண்டு ஓட்டுவமே..!

எளிமையாக வெயில் விரட்ட
ஏராளமாய் வழி இருக்கு
குடிசை வாழ் மக்கள்மேல்
வெயிலுக்குத்தான் பகையிருக்கு..!

கோலா இருக்கு கலர் இருக்கு
குப்பியிலே வியாதி கிருமியிருக்கு
மோரும் தர்பூசணியும் - இறைவன்
ஏழைக் களித்த வரமிருக்கு..!

மேட்டுக்குடி மக்களுக்கோ
வெயில் என்றால் பயமிருக்கு
பதுங்கி பதுங்கி இருப்பதற்கு
ஏசி எண்ணும் சிறையிருக்கு....!!

கிராமத்திலே பிறந்துவிட்டோம்
எங்களுக்கு கவலை எதற்கு
தாராளமாய் பெய்த மழையில்
ஏரி குளம் நிறைந்திருக்கு..!!

வீடு சுற்றி மரமிருக்கு
வேப்பமர காத்திருக்கு
ஆற்றினிலே நீராடி
அரவணைக்கும் தென்றல் இருக்கு..!

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
களித்திருக்கும் இன்பமெல்லாம்
கிராமமன்றி வேறெங்கிருக்கு..?

(பொதிகை தொலைக்காட்சியில் இந்த மாதம் இலக்கியச் சுவை
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான எனது கவிதை)

எழுதியவர் : சொ.சாந்தி (29-May-16, 8:54 pm)
பார்வை : 825

மேலே