இருள்

முதல் முறையாய் அவள்
சிறகணிந்து கொண்டபோது
அவளின் இதழ் ஓரமாய்
இரண்டு துளி ரத்தம்
கசிந்து கொண்டிருந்ததை
அவள் கவனித்திருக்கவில்லை..
செல்லரித்துக் கொண்டிருந்த
முன் நெற்றியின் ஒரு பகுதி
இன்னும் கொஞ்சம் மீதமிருந்தது
அவளின் முதல் சிறகின்
மென்மையை ஸ்பரிசித்து விட..
விரலிடுக்குகளின் இருளுக்குள்
முழுவதுமாய்ப் பதுங்கி இருப்பதாய்
அவள் நினைத்திருந்தாள்
கொஞ்சம் ரோஜா இதழ்களையும்
இரண்டு கத்திகளையும்
கையோடு சுமந்துகொண்டு ..
போதுமினி மிச்சமில்லையெதுவும்
எனும்போது
அவளின் கருநிற ஆடையின் ஒரு பகுதியை
அவளின் விரல் நுனிகள் கிழித்துக் கொண்டிருந்தன..
முன்பொருமுறை
முழுவதுமாய் நீருக்குள் மூழ்கிப் போகுமுன்
அவளின் கை விரல்களைப்
பற்றி இழுத்த சங்கிலி ஒன்றை
அவள் புதைத்து வைத்திருக்கும்
மலை உச்சியின் ஒரு ஓரத்தில்
இன்னும் ஒரு ரோஜாச்செடி மீதமிருந்தது..
அவளின் இதழ் கடைசியில்
வழிந்து கொண்டிருந்த ரத்தம்
கொஞ்சம் உறைந்து போயிருக்க
மலை உச்சியின் மீது படிந்திருந்த
தன் நிழலின் வாசனையை
இப்போதவள் நுகர்ந்து கொண்டிருக்கிறாள்...- கிருத்திகா தாஸ்

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (31-May-16, 11:26 am)
Tanglish : irul
பார்வை : 332

மேலே