உமது காலடிக்கு கீழ் உள்ள நிலமானது எமது மூதாதையரின் சாம்பல் என்று உமது குழந்தைகளிற்குக் கற்பிக்கவும்

உலக சுற்றுச் சூழல் வாரத்தினை அனுஸ்டித்து முடித்து விட்டோம்
ஆனால்
இளவேனிற் காலத்தில் இலைகளின் சுருள் விரிந்தசையும் ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா?
இரவில் நீர் நிலைகளைச் சுற்றிக் காணப்படும் தவளைகளின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறீர்களா?
காற்றின் இனிமையான ஒலியையும் அதன் சுகந்தத்தினையும் அனுபவித்து சுவாசித்திருக்கிறீர்களா?
நீங்கள் வாழும் இயற்கையை அணு அணுவாக ரசித்து அதனைப்பற்றி சிந்தித்திருக்கிறீர்களா?
இவை எல்லாவற்றையுமே இணைத்து தாங்கள் வாழ்ந்த இயற்கைச் சூழலை நேசித்த ஒரு மக்கள் கூட்டத்தின் சுவாசம் இங்கே…..
உலகில் இதுநாள் வரையும் இப்படி ஒரு அதி உன்னதமான நாம் வாழும் சூழல் மீதான தாகம் எழவில்லை என்று ஜக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பே வியக்கிறது….
அது என்ன?
அது ஒரு உரை. அது ஒரு பதில். ஆன்மாவில் இருந்து வெளிப்பட்ட பதில்......
...........................................................................................................................................
நன்றி – அன்ரனி நோர்பேட்.2003
1854 இல் சியாட்டில் என்பவர் செவ்விந்திய மக்களின் நிலத்தினை தனக்கு விற்கும்படி அச் செவ்விந்திய மக்களின் தலைவனிடம் கோரிக்கை விடுத்தபோது செவ்விந்தியத் தலைவனால் சியாட்டிலுக்கு கூறப்பட்ட பதிலே இவ்வுரையாகும். இவ்வுரையானது வாசிங்ரனில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்ததுடன் அண்மையில் ஜக்கிய நாடுகளுக்கான சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சூழலைப்பற்றி இதுவரையும் வெளிவராத மிகவும் அழகான ஆழம்மிக்க கூற்றான இவ்வுரை சியாட்டில் பிரகடனம் என கூறப்படும்.
வெள்ளையரான வாசிங்டனின் அதி உயர் தலைவன் எமது நிலத்தை வாங்குவதற்கு விரும்புவதாக அறிவித்துள்ளான். அத்துடன் எங்களுக்குத் தனது நல்லெண்ணத்தையும் நட்பினையும் கூறியுள்ளான். நாம் உமது கோரிக்கையைக் கவனத்தில் கொள்வோம். நாங்கள் நிலத்தினை விற்காவிட்டால் வெள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் வந்து எமது நிலத்தை எடுத்தக் கொள்வார்கள்.
எப்படி நீ வானத்தை, நிலத்தின் உஸ்ணத்தை, விற்கவோ வாங்கவோ முடியும்? இச் சிந்தனை எமக்கு ஆச்சரியமாக உள்ளது. வளியின் கிளர்ச்சியூட்டும் தன்மையையும் நீரின் ஒளிர்வினையும் நாங்கள் சொந்தமாகக் கொண்டிராவிட்டால் அவற்றை உம்மால் எவ்வாறு வாங்க முடியும்? இப் பூமியின் ஒவ்வொரு பகுதியும் எமது மக்களுக்குப் புனிதமானது. ஓவ்வொரு மணற் பரப்பும் பளிச்சிடுகின்ற பைன்மர ஊசி இலைகளும் ஒலியெழுப்புகின்ற பூச்சியினங்களும் எனது மக்களின் அனுபவம் நினைவுகளைப் பொறுத்து பரிசுத்தமானது.
வெள்ளை மனிதன் இறப்பின் பின் நட்சத்திரங்களின் மீது நடந்து செல்லும் போது தனது பிறந்த நாட்டை மறந்து விடுகிறான். இந்த அழகான பூமியை நாம் இறந்த பின்பும் மறந்து விடுவதில்லை. இது சிவப்பு மனிதனின் தாய். நாங்கள் பூமியின் ஒரு பகுதி எம்மில் ஒரு பகுதி அது. மணம் வீசும் மலர்கள் எமது சகோதரிகள். கரடி குதிரை பாரிய கழுகுகள் எமது சகோதரர்கள். றொக்கி மலையின் உயர் முடியும் கவர்ச்சிதரும் புல்வெளிகளும் குதிரைகளின் உடல் வெப்பமும் மனிதனும் எல்லோரும் ஒரே குடும்பமே. எனவே வாசிங்டனில் உள்ள அதி உயர் தலைவன் எமது நிலத்தை வாங்குவதற்கு விரும்புவதாகச் சொல்லும் போது எம்மிடம் இருந்து அதிகமானவற்றையே கேட்பதாகத் தெரிகிறது. எங்களுக்கு ஓர் இடத்தை ஒதுக்குவதாகவும் அங்கு நாங்கள் வசதியாக வாழலாம் எனவும் அவன் கூறுகிறான். அவன் எமது தந்தை நாங்கள் அவனின் பிள்ளைகளாகவும் இருக்கலாம். எனவே எமது நிலத்தை வாங்குவதற்கான உமது கோரிக்கையை நாங்கள் கவனத்தில் கொள்வோம். ஆனால் அது இலகுவானதன்று. இந் நிலம் எங்களுக்கு புனிதமானது.
அருவிகளிலும் ஆறுகளிலும் அசைந்து செல்லும் பளிச்சென்ற நீரானது உண்மையில் வெறும் நீரன்று. அது எமது முன்னோர்களின் இரத்தம். எமது நிலத்தை உமக்கு விற்பதாக இருந்தால் இது புனிதமானது என நீர் நினைவிற் கொள்ள வேண்டும். உமது பிள்ளைகளுக்கு இது புனிதமானது என சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏரிகளில் தெளிவான நீரில் ஏற்படும் பிரதி பலிப்புக்கள் எமது மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் ஞாபகங்களையும் எடுத்துக் கூறும். நீரில் எழும் அமைதியான ஓசைகள் எனது தந்தையின் குரலாகும். ஆறுகள் எமது சகோதரர்கள். அவை எமது படகுகளையும் எமது குழந்தைகளுக்கான உணவினையும் கொண்டு செல்கின்றன. எமது நிலத்தை உமக்கு விற்கும் போது நதிகள் எமது சகோதரர்கள் என்பதை நீ ஞாபகத்திலிருத்த வேண்டும். உமது பிள்ளைகளிற்கு கற்பிக்க வேண்டும்.
மலைகளில் காணப்படும் பனிப்படலம் காலையில் சூரியன் உதிக்கும்போது ஓடி மறைந்து விடுவது போன்று முன்னேறி வரும் வெள்ளை மனிதனுக்கு முன்பு சிவப்பு மனிதன் எப்பொழுதும் பின்வாங்கிச் செல்பவனாகவே இருக்கிறான். ஆனால் எமது தந்தையர்களின் சாம்பல்கள் புனிதமானவை. அவர்களது கல்லறைகள் எமது பரிசுத்தமான நிலங்கள். அதனால் இந்தக் குன்றுகள் இந்த மரங்கள் பூமியின் இந்தப்பகுதி எமக்கு தெய்வீகமானது. வெள்ளை மனிதன் எமது வழிகளை விளங்கிக் கொள்ள மாட்டான் என்பது எமக்குத் தெரியும். நிலத்தின் ஒரு பகுதி அவனுக்கும் உரியது. ஆனால் இரவில் வந்து அவனுக்கு தேவையானது எதுவோ எல்லாவற்றையும் எடுத்து விடுவான். அவர்கள் வெளிநபட்டவர்கள்.
பூமி அவனது சகோதரன் அன்று. ஆனால் அவனது எதிரி இதனை அவன் வெற்றி கொண்டதிலிருந்து எங்கும் செல்கிறான். தனது தந்தையர்களின் கல்லறைகளை பின்னால் விட்டுச் செல்கிறான். அதனைப் பொருட்படுத்துவதில்லை. அவனது தந்தையர்களின் கல்லறைகளும் குழந்தைகளின் பிறப்புரிமையும் அவர்களுக்கு மறந்துவிட்டன. அவன் தனது தாய் பூமி தனது சகோதரன் வான் போன்றவற்றை வாங்குவதற்குரியது கொள்ளையடிப்பதற்குரியது மந்தைகளைப் போல நினைத்த நேரத்தில் விற்க முடியும் என்றே நம்புகிறான். இவனது நடவடிக்கைகள் பூமியைப் பாலைவனமாக்கி விடும்.
உமது வழிகளிலிருந்து எமது வழிகள் வேறுபட்டன. உங்கள் நகரங்களின் காட்சிகள் சிவப்பு மனிதனின் கண்களில் வலியை ஏற்படுத்துகின்றது. இதற்கு காரணம் சிவப்பு மனிதன் காட்டு மிராண்டி விளங்கிக்கொள்ளத் தெரியாதவன். மனிதர் தரையின் மீது துப்பும் போது அவர்கள் தம்மீதே மண்ணைப் போடுகிறார்கள். இதுதான் எமக்குத் தெரிந்தது. பூமி மனிதனுக்குச் சொந்தமானதல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன். இது எமக்குத் தெரியும். எல்லா விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எமது மக்களுக்காக உம்மால் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு போவதற்கான உமது விருப்பத்தை நாங்கள் கவனத்திற் கொள்கிறோம். அங்கு நாங்கள் தனியாக வாழ்வோம். எமது நாட்களின் இறுதிக் காலத்தை எங்கே கழிக்க வேண்டுமென்பது முக்கியமல்ல. எமது குழந்தைகள் தமது தந்தையர் தோல்வியில் எத்தகைய தாழ்மையுடன் நடந்தார்கள் என்பதை கண்டுள்ளனர். எமது போர் வீரர்கள் அவமானத்தை பெற்றார்கள். தோல்வியின் பின் தமது நாட்களைச் சோம்பலுடன் கழிக்கிறார்கள். இனிப்பான உணவுகள் தாக்கமான குடிவகைகள் மூலம் தமது உடல்களை மாசுபடுத்துகிறார்கள். எமது இறுதிக்காலங்களை எங்கே கழிக்கப் போகிறோம் என்பது முக்கியமல்ல ஏனெனில் நாங்கள் மிகக் குறைந்த தொகையினரே.
உங்களைப் போல் மிகவும் வலிமை உடையவர்களாகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் ஒரு காலத்தில் திகழ்ந்த பெருமை மிக்க பழங்குடியினரின் பிள்ளைகள் நாங்கள். இப் பூமியில் வாழ்ந்து காடுகளின் வளைவுகளில் ஓடித்திரிந்த பெருமை மிக்க பழங்குடியினரின் பிள்ளைகள் உங்களைப் போல் வலிமை உடையவர்களாகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்தால் தமது மக்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்தவதற்கு செல்ல மாட்டார்கள். ஆனால் நாம் ஏன் இறந்துவிட்ட எனது மக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். பழங் குடியினரும் மனிதர்களே. அதற்கு மேலாக ஒன்றுமில்லை. மனிதர்கள் கடலின் அலைகள் போன்று வரலாம் போகலாம். வெள்ளை மனிதனின் கடவுள் ஒரு நண்பனைப்போல் அவனுடன் நடந்து செல்லலாம். அவனுடன் பேசலாம். ஆனால் பொது விதியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது.
எல்லாம் நடந்தபின் நாங்கள் சகோதரர்களாக இருக்கலாம். அவ்வாறு நடக்கலாம். ஆனால் ஒரு நாள் எமது கடவுள்தான் தமது கடவுள் என்பதை வெள்ளை மனிதன் கண்டு பிடிப்பான் என்பது எமக்குத் தெரியும். எமது சொந்த நிலங்களை நீ சொந்தமாக்க விரும்புவது போன்று அந்தக் கடவுளையும் நீ சொந்தமாக்க நினைக்கலாம். ஆனால் முடியாது. அவன் மனிதனின் கடவுள். அவனது பரிவு இரக்கவுணர்ச்சி சிவப்பு மனிதனுக்கும் வெள்ளை மனிதனுக்கும் சமமானது. இந்தப் பூமி அவனுக்கு பெறுமதி மிக்கவொன்று. ஏனையவர்களிலும் பார்க்க விரைவாக வெள்ளையர்களும் சிலவேளைகளில் மறைந்து விடலாம்.
கடவுளின் வலிமையால் உந்தப்பட்டு உனது அழிவுகளில் நீ பிரகாசமாக சுடர் விடலாம். ஆனால் இந்த நிலத்தை அந்தக் கடவுள்தான் உனக்குக் கொடுத்தார். சில விசேட நோக்கங்களுக்காக இந் நிலத்தின் மீதும் சிவப்பு மனிதன் மீதும் உனக்கு ஆதிக்கம் கொடுக்கப்பட்டது. இந்த விதியை எமக்கு அறிய முடியாமலேயே இருக்கிறது. ஆதனை எம்மால் விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை.
வெள்ளை மனிதனுடைய இடங்களில் அமைதியான இடம் எதுவுமில்லை. இளவேனிற் காலத்தில் இலைகளின் சுருள் விரிந்தசையும் ஓசையைக் கேட்பதற்கு இடமேதும் இல்லை. சிலவேளை நான் நாடோடியாக இருப்பதனால் இதனை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இரைச்சலினால் காதுகள் பாதிக்கப்படுகின்றன. இரவில் நீர் நிலைகளைச் சுற்றிக் காணப்படும் தவளைகளின் பேச்சுக்களைக் கேட்கமுடியாத ஒரு மனிதனின் வாழ்க்கையை என்னவென்று சொல்வது. காற்றின் இனிமையான ஒலியையும் அதன் சுகந்தத்தினையும் செவ்விந்தியர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இக்காற்றானது சிவப்பு மனிதனுக்கு பெறுமதி மிக்கது. வெள்ளை மனிதன் தான் சுவாசிக்கும் வளியை அவதானிப்பதில்லை. பல நாட்களாக இறந்து கொண்டிருக்கும் மனிதனைப்போல் அவன் உணர்ச்சியற்றவனாக இருக்கிறான். எமது நிலத்தை உனக்கு விற்கும்போது காற்று எமக்கு பெறுமதி வாய்ந்ததென்பதை நினைவிற் கொள்ளவும். காற்றானது தனக்கு ஆதரவளிக்கும் எல்லா உயிர்களுடனும் அதன் உண்மைப் பொருளைப் பகிர்ந்து கொள்கின்றது. எனவே எமது நிலத்தினை வாங்குவதற்கான உமது கோரிக்கையை நாங்கள் கவனத்திற் கொள்கிறோம். நாங்கள் சம்மதித்து விட்டால் ஒரு முன் நிபந்தனையை நான் மேற்கொள்வேன். அதாவது வெள்ளை மனிதன் இந்த நிலத்தின் விலங்குகளைத் தனது சகோதரர்களாகப் பராமரிக்க வேண்டும்.
நான் நாடோடி வேறு வழிகளில் இதனை என்னால் விளங்கிக் கொள்ள முடியாது. பிறேயறிஸ் புல் வெளிகளில் ஆயிரக்கணக்கில் காணப்படும் மந்தைகளைக் கடந்து செல்லும் புகையிரதத்திலிருந்து வெள்ளை மனிதன் அவற்றினை சுட்டுக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கின்றேன். நான் நாடோடியாக இருப்பதனால் நாங்கள் உயிர் வாழ்வதற்கு மாத்திரமே கொல்லுகின்ற மந்தைகளைப் பார்க்கிலும் புகை பொதிந்த இரும்புப் படிவுகளைக் கொண்ட தரைகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. மந்தைகளின்றி மனிதன் ஏது. அவனும் இறக்க வேண்டியதே. மந்தைகளுக்கு என்ன நடந்தாலும் அதுவே மனிதனுக்கு விரைவில் நிகழும். எல்லா விடயங்களும் ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவையே.
உமது காலடிக்கு கீழ் உள்ள நிலமானது எமது மூதாதையரின் சாம்பல் என்று உமது குழந்தைகளிற்குக் கற்பிக்கவும். அவ்வாறு செய்யின் அவர்கள் நிலத்தினைப் பேணுவார்கள். பூமி எமது தாய் என்று எமது குழந்தைகள் சிந்தித்தது போன்று உமது குழந்தைகளுக்கும் கற்பிக்கவும்.
சில வேளைகளில் எமது குறுகிய காலத்தை எமது விருப்பப்படி வாழ்ந்து விடலாம். கடைசி சிவப்பு மனிதன் இப்பூமியை விட்டு மறையும் போது அவனது நினைவுகளானது பிறேயறிசின் மேலாகச் செல்லும் முகில்களின் நிழல்களாகவே இருக்கும். இக்காட்சிகளும் காடுகளும் எனது மக்களின் ஜீவ சக்கியைக் கொண்டிருக்கும். பிறக்கும் ஒருவன் தனது தாயின் இதயத் துடிப்புக்களை அன்பு செய்வது போன்று அவர்கள் இந் நிலத்தை அன்பு செய்ய வெண்டும். எனவே நாங்கள் எமது நிலத்தை விற்கும் போது நீங்கள் காட்டும் பரிவு எம்மால் காட்டப்பட்ட அன்பினைப் போன்று இருக்க வேண்டும். இந்நிலத்தை நீங்கள் எடுக்கும் போது இந் நிலத்தின் நினைவுகளை உங்கள் மனதில் பதித்துக் கொள்ள வெண்டும். உங்கள் வலிமையினால் உள்ளத்தினால் இதயத்தால் இந் நிலத்தினை உமது குழந்தைகளுக்குப் பேணிப் பாதுகாக்கவும் கடவுள் எம்மை அன்பு செய்தது போன்று இதன்மேல் அன்பு செலுத்தவும் வேண்டும்.
ஒரு விடயம் எமக்குத் தெரியும். எமது கடவுள் தான் உங்களது கடவுள். இந்தப்பூமி அனைவருக்கும் பெறுமதி மிக்கது. பொது விதியில் இருந்து வெள்ளை மனிதனுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் பின்பும் நாங்கள் சகோதரர்களாக இருப்போம். சந்திப்போம்.