இந்தத் தொழில விட்டுருவையா
இந்தத் தொழில விட்டிருவையா ?
-------------------------------------------------------
-திரு
தேகமெங்கும்
நீலவழிச் சாலை...
அதன் மேலே பயணிக்கும்
மெல்லிய பூங்காற்று
திரண்ட கனிகளை உரசிச்செல்கிறது...
எச்சில் ஊறிய
நாவின் சில்லிப்பு
உடற்ப்பரப்பெங்கும் நெருடுகிறது...
திராட்சை பிழிந்த
கோப்பைக்குள் மிளிர்கிறது
மோகத்தின் தழும்புகள்...
தட்டத்திலிருக்கும் ஆப்பிள்
உன் கன்னத்தில்
குதிக்கிறது என்றான்...
சிறுமூங்கிலின் துளைக்குள்
அடைத்துவைத்தேன்
பெண்மையின் நாணங்களை...
கிட்டநெருங்கி வந்தவனிடம்
உயிரற்ற பிணமாக நின்றிருந்தேன்...
அவன் கட்டி அணைத்த
கணத்துளிகளில்
கட்டைகளாக உருமாறியிருந்த
எலும்புகள் பற்றி எரிய ஆரம்பித்தன...
இன்றையநாள் இரவின்
குரூரம் அருவருப்பாக தோன்றியது...
நெடிய கிடத்தலின்பின் விடிந்த
அதிகாலையில் பிணைத்திருந்த
நேரஅவகாசம் நிறைவடைந்தது...
ஆடையின்றிக் கிடந்த
என்மீது குப்பைபோல வீசினான்
பணத்தை...
அடிவயிறு குடலோடு
அப்பிக்கொண்டது...
பசியின் நரம்புகள்
பழுப்பேறிக்கொண்டிருந்தபோது
நிமிர்ந்து கொண்டது அவனது
இரண்டாம் தாகம்...
மீண்டும் ஒருமுறை
பாரபட்சமில்லாமல்...
நிசப்த அலைகள்
ஊடுருவிக்கொண்டிருக்க
என் கண்ணீர்த்துளிகள் கனமானது...
பலமிழந்த அவன்
"முதல் தடவையா"
குரலில் நடுக்கங்கள்
திணறியது...
பெரும்பாறையை மார்பினில்
சுமந்து சென்று கண்ணாடியில்
இறக்கிவைத்து 'இல்ல' என்ற
எனது பிம்பத்தில்
காதல் கடந்து
தெய்வீகம் கலந்த
அவனது கேள்வி துளிர்த்தது...
"இந்தத் தொழில விட்டிருவையா ?
உன்னக் கல்யாணம் பண்டிக்கிட்டா"...