வெல்லுமோ வாழ்வும் மிளிர்ந்து

என்னே உலகமடா என்றுமனம் சோர்ந்திருக்க
முன்னே தெரிந்தாய் முருகையா ! - பொன்னின் .
ஒளியாய் அழகின் உருவாக நின்றாய்
களித்ததென் உள்ளமுனைக் கண்டு .

கண்டதென் பேறு கருணைவடி வானவனே
வண்டமிழால் பாடிநிதம் வாழ்த்திடுவேன் !- புண்பட்ட
நெஞ்சத்தை ஆற்றியே நிம்மதி தந்திடுவாய்
கெஞ்சுகிறேன் சற்றேனும் கேள் .

கேளாதோ நின்செவியும் கேதமென் செய்தேன்யான்
கோளாறு போக்கிக் குணமளிப்பாய் - மீளாத்
துயர்வரினும் பக்கத் துணையா யிருந்து
தயவுடன் நின்னருள் தா .

தாராயோ கந்தா தணிகை வடிவேலா
பாராயோ கண்திறந்து பக்தனெனை - தீராத
வல்வினைகள் தீர்க்க மயிலேறி வாராயோ
வெல்லுமோ வாழ்வும் மிளிர்ந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-Jun-16, 10:47 pm)
பார்வை : 243

மேலே